மகாராஷ்டிராவில் மணமகள் கன்னித்தன்மை சோதனையில் தோல்வியடைந்ததாக கூறி சாதி பஞ்சாயத்து நடந்து முடிந்த திருமணத்தை முறித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாச்சிக்கில் அண்மையில் 20 வயது பெண் ஒருவர், 25 வயது வாலிபரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் காஞ்சர்பாத் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
அந்த சமூக வழக்கத்தின் படி திருமணமான புதுமணத் தம்பதிகள் வெள்ளை விரிப்பு கொண்ட படுக்கை மீது உறவு கொள்ள வேண்டும்.
இதன் பின்னர், தம்பதிகள் படுத்திருந்த விரிப்பில் ரத்தக் கறை இருக்கிறதா என்பதை உறவுக்காரர்கள் சோதிப்பர். அப்படி இல்லையென்றால் அந்த பெண்ணுக்கு கன்னித்தன்மை இல்லை எனக் கூறி அவளை தள்ளி வைப்பர்.
இந்நிலையில் இந்த திருமணத்திலும் படுக்கை விரிப்பில் ரத்தக் கறை இல்லாததால் அந்த பெண் கன்னித்தன்மை அற்றவள் எனக் கூறி மணமகன் அவளை ஒதுக்கி வைத்துள்ளார். சாதி பஞ்சாயத்துத் தலைவர்களும் திருமணத்தை ரத்து செய்வதாக தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் தான் பொலிஸ் தேர்வுக்காக பல்வேறு உடற்பயிற்சிகள் மேற்கொண்டதாலேயே தன்னால் கன்னித்தன்மை சோதனையில் தேர்ச்சி பெறமுடியவில்லை என்று விளக்கமளித்தார்.
ஆனால், அவர் வாதத்தை யாரும் ஏற்கவில்லை. திருமணத்தை செல்லத்தக்கதாக அறிவிக்க வேண்டும் என்றால் மணப்பெண் மற்றுமொரு சோதனைக்கு உட்பட வேண்டும் என பஞ்சாயத்தில் கூறியுள்ளனர்.
அதாவது அரைநிர்வாணத்தில் மணப்பெண்ணை ஓட விட்டுவர். அவளை துரத்தும் பஞ்சாயத்து ஆண் உறுப்பினர்கள் அவள் மீது சூடான மாவுப் பந்தை வீசுவர். அதை அந்தபெண் பொறுத்துக் கொண்டு அவள் ஓட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
இதுகுறித்து மணப்பெண்ணும் அவரது தாயாரும் பொலிசில் புகார் கொடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் இருவரையும் பெண் வீட்டாரே பூட்டி வைத்துள்ளனர்.
மாநில சமூக புறக்கணிப்புக்கு எதிரான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹமீத் தபோல்கர் கூறுகையில், இச்சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்துக்கே மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இத்தகைய வன்கொடுமைகளை தடுக்க உடனடியாக சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மராட்டிய மாநிலத்தில் சாதி பஞ்சாயத்து மற்றும் ஊர்பஞ்சாயத்து எந்த வடிவிலும் செய்ல்படக்கூடாது என தடை செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-http://news.lankasri.com