இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் பொலிசாருக்கும், ஊர் மக்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் இதுவரை பொலிஸ் உயர் அதிகாரி உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கலவரத்தில் ஈடுபட்ட 320 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலத்தின் மதுரா நகரத்தில் உள்ள ஜவகர்பாக் என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான 280 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த இடத்தை ஏராளமானோர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக ஆஷாத் பாரத் விதிக் கிராந்தி என்ற அமைப்பினர் செயல்பட்டு வந்துள்ளனர்.
அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி அலகாபாத் உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து பொலிஸ் உயர் அதிகாரி முகுல்திவேதி தலைமையில் நூற்றுக்கணக்கான பொலிசாரும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் ஜவகர்பாக் பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப்போது ஆஷாத் பாரத் அமைப்பினர் உட்பட 3 ஆயிரம் பேர் பொலிசாரை தடுத்து உள்ளர்கள். அதையும் மீறி பொலிசார் செல்ல முயன்ற போது அவர்களை நோக்கி அந்த அமைப்பினர் நாட்டு துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர்.
இதில் குண்டு பாய்ந்து பொலிஸ் உயர் அதிகாரி முகுல் திவேதி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள், கண்ணீர்புகை குண்டுகளும் வீசப்பட்டன. பொலிசாரை நோக்கி போராட்டக்காரர்கள் மறைந்து இருந்து தொடர்ந்து சுட்டதால், ஏராளமான பொலிசார் காயம் அடைந்தனர்.
இருவருக்கும் நடந்த மோதலில் உயர் அதிகாரி உட்பட மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பொலிசார் படுகாயம் அடைந்துள்ளனர். 320 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. இதுபற்றி உடனடியாக விசாரணை நடத்த மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
-http://news.lankasri.com