4.5 லட்சம் வாக்காளருக்கு நன்றி, வக்கீல்கள் போராட்டத்திற்கு ஆதரவு: நாம் தமிழர் பொதுக்குழு தீர்மானம்

seeman-thirumurugaதிருச்சி: வாக்களித்த நாலரை லட்சம் பேருக்கும் நாம் தமிழர் பொதுக்குழு கூட்டம் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. திருச்சியிலுள்ள ரோசன் திருமண அரங்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இவைதான்:

தீர்மானம்-1: நடந்து முடிந்த 2016 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த நான்கரை லட்சம் தமிழ் உறவுகளுக்கு இந்த பொதுக்குழு வாயிலாக நாம் தமிழர் கட்சி மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. பெருகி ஓடிய பண வெள்ளத்திற்கும், கோரத்தாண்டவம் ஆடிய அதிகாரப் புயல்களுக்கும் நடுவே, இறுதி வரை சமரசில்லாமல் பெரும் நம்பிக்கையோடு 2016 சட்டமன்றத் தேர்தலை சந்தித்துச் சாதித்த என்னுயிர் நாம் தமிழர் தம்பிகளுக்கு நாம் தமிழர் கட்சி தனது பெருமிதமான புரட்சி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது. இந்தத் தேர்தல் களம் நமக்கு அனைத்துவகையான அனுபவங்களையும் தந்திருக்கிறது. இந்த அனுபவங்கள் நாளைய தமிழினத்தின் விடியலுக்கு நாற்றங்காலாகவும் எதிர்வருகிற உள்ளாட்சி மட்டும் பாராளுமன்ற தேர்தல்களுக்கு மிகபெரிய படிப்பினையாக திகழும் என நாம் தமிழர் கட்சி உறுதியாக நம்புகிறது.

தீர்மானம்-2: நடைபெற்று முடிந்திருக்கின்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலை பொறுத்த வரையில் இந்திய தேர்தல் ஆணையம் அக்கறையற்றும், நடுநிலையற்றும் நடந்து கொண்டது என நாம் தமிழர் கட்சி பதிவுசெய்து தனது கண்டனத்தை தெரிவிக்கின்றது. தேர்தலில் நூறு சதவீதம் வாக்கு பதிவுக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு செலவிடப்பட்ட தொகை மற்றும் நேரங்களில் ஒரு சதவீதத்தைகூட, ‘நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டும்’ என்பதில் தேர்தல் ஆணையம் ஆர்வத்தை காட்டவில்லை என்பதை இப்பொதுகுழு வாயிலாக நாம் தமிழர் கட்சி பதிவுசெய்கின்றது. பெருவெள்ளமாக பாய்ந்த பணவெள்ளத்தை தடுக்க தேர்தல்ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததோடு வேடிக்கையும் பார்த்தது சனநாயக மாண்புகளுக்கு எதிரானது என்று நாம் தமிழர் கட்சி இப்பொதுக்குழு வாயிலாக தெரிவிக்கிறது. வாக்களர்களுக்கு பணம் அளித்தது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தேர்தலில் பங்கேற்க அனுமதித்தது போன்ற சனநாயக விரோத நடவடிக்கை வேறு ஏதுமில்லை என நாம் தமிழர் கட்சி தெரிவிக்கிறது. பணநாயகத்தால் சனநாயகம் வீழ்த்தப்படுவது நாகரீக சமூக ஒழுங்கிற்கு எதிரானது என்றும், நடுநிலையான நேர்மையான தேர்தலை உறுதிசெய்ய தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், இந்த அநீதியான போக்கு இனிமேலும் தொடரக்கூடாது என்றும் இப்பொதுக்குழு வாயிலாக நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறது. தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் விரைவில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கின்ற திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நேர்மையான, ஆளுங்கட்சியின் அதிகாரத்தலையீடு இல்லாத நடுநிலையான தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்த உறுதியேற்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

தீர்மானம்-3: எதிர்வருகிற உள்ளாட்சிமன்றத்தேர்தலிலும், அடுத்து வருகிற பாராளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்பதை கம்பீரமாக இப்பொதுக்குழு வாயிலாக அறிவிக்கிறது. லட்சிய உறுதி மிக்க தனது புரட்சிகர பயணத்தை நாம் தமிழர் கட்சி கம்பீரமாக தொடரும் என்றும் சமரசமில்லாத கொள்கை தெளிவோடு அரசியல்களத்தை அணுக நாம் தமிழர் கட்சி ஆழ்ந்த பற்று உறுதியோடு திகழ்கிறது என இப்பொதுக்குழு வாயிலாக நாம் தமிழர் கட்சி பேரறிவிப்பு செய்கிறது.

தீர்மானம்-4: இந்திய முன்னாள் பிரதமர் ராசீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு கடந்த 25 ஆண்டுகளாக சிறைக்கொட்டடியில் வாடிவரும் 7 தமிழர் விடுதலையை உடனடியாக புதிதாக பதவியேற்றிருக்கிற மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும் என இப்பொதுக்குழு வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது. இனியும் தாமதிக்காமல் தமிழ்த்தேசிய இனத்தின் நீண்டநாள் கோரிக்கையான ஏழு தமிழர் விடுதலையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டுமென இப்பொதுக்குழு வாயிலாக கோருகிறது.

தீர்மானம்-5: தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாநில மொழிகளில் பாடத்திட்டங்கள் அமைத்து, தேர்வுகள் நடத்தி அத்தேர்தல்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்கைக்காண அனுமதிபெற்று வந்த நிலையில், எந்த அடிப்படை கூறுகளையும் கருத்தில்கொள்ளாமல் நாடு முழுமைக்குமான நுழைவுத்தேர்வு என்பது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். மேற்படி நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் சட்டமியற்றி ஆவண செய்யவேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக்கொள்வதோடு இந்திய அரசியல் சாசன சட்டத்தில் மாநிலப் பட்டியலில் இந்தியக் கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றிய மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, மத்திய அரசு உடனடியாக அரசியல் சாசன சட்டத்திருத்தத்தின் மூலம் மீண்டும் கல்வியை மாநிலப்பட்டியலில் சேர்க்க வேண்டும் என இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்-6: அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி வழக்கறிஞர்கள் சட்டம் 1961இல் கொண்டுவரப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் மூலமாகவே வழக்கறிஞர்கள் நடவடிக்கை எடுத்து அவர்களின் தொழில் உரிமையை பறித்து தகுதிநீக்கம் செய்ய முடியும் என்கிற சட்டத்திருத்தம் அதிர்ச்சியளிக்கிறது. விதிமீறல் தொடர்பான நிகழ்வுகளை விசாரித்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் சட்டத்தின்படி பார் கவுன்சில் என்கிற அமைப்பு இருக்கும்போது இந்த சட்டத்திருத்தம் வழக்கறிஞர் சமூகத்தின் சுதந்திரத்தன்மையை கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக வழக்கறிஞர்கள் சட்டம் 1961இல் கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தங்களை எந்த நிபந்தனையுமின்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. தமிழினத்தின் துயர்காலங்களில் இவ்வினத்திற்கு தனது ஆற்றல்மிகு போராட்ட உணர்வின் மூலம் தோள்கொடுத்து துணைநின்ற வழக்கறிஞர் சமூகத்திற்கு நாம் தமிழர் கட்சி என்றென்றும் துணைநிற்கும் என இப்பொதுக்குழு அறிவிக்கிறது.

http://tamil.oneindia.com

TAGS: