கங்கை நதிக்கரையில் நிறுவ நாமக்கல்லில் இருந்து கிளம்பிய 12 அடி திருவள்ளுவர் சிலை

pic01நாமக்கல்: ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் வைப்பதற்காக ஒரே கல்லில் செதுக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை நாமக்கல்லில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி மீது பற்று வைத்துள்ள பாஜக எம்.பி. தருண் விஜய் மேற்கொண்ட முயற்சியின் பலனாய் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையோரம் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை வரும் 26ம் தேதி நிறுவப்படுகிறது.

இதற்காக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூலிப்பட்டியை சேர்ந்த சிற்பி எல்.எம்.பி. குமரேசன் ஒரே கல்லில் திருவள்ளுவர் சிலையை வடிவமைத்தார். இந்நிலையில் சிலையை ஹரித்துவாருக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டு திருக்குறள் பாடினர். சில மாணவர்கள் திருவள்ளுவர் போன்று வேடமிட்டு வந்திருந்தனர். ரூ. 20 லட்சம் செலவில் செய்யப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை லாரி மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து ரயில் மூலம் ஹரித்துவாருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கொல்லிமலை அடிவாரத்தில் 10.50 டன் எடையுள்ள கல்லை எடுத்து 20 சிற்பிகள் 35 நாட்கள் பணியாற்றி சிலையை செதுக்கியுள்ளனர். 12 அடி உயரமுள்ள அந்த சிலையின் தற்போதைய எடை 4.50 டன் என சிற்பி குமரேசன் தெரிவித்தார்.

tamil.oneindia.com

TAGS: