கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும்! அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

jayalalitha_001கச்சத்தீவு தொடர்பான 1974 மற்றும் 1976ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அநீதியான ஒப்பந்தங்களை இரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அங்குள்ள பாரம்பரிய மீன்பிடி உரிமையை தமிழக மீனவர்களுக்கு மீட்டுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று ராயப்பேட்டை ஔவை சண்முகம் சாலையில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் கழகத்தில் இடம்பெற்றது.

தமிழக் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்ட தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் சீரமைப்புப் பணிகளை தமிழக மீனவர்களின் ஆலோசனைக்குப் பிறகே நடத்த, இலங்கை அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.

இக்கோரிக்கைகளின் நியாயத்தை நீதி உணர்வோடு அணுகி, ஏற்று, தமிழக மீனவர்களைக் காப்பாற்றி, இந்திய நிலப்பரப்பை மீட்டெடுக்க மத்திய அரசை இந்தச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

அத்துடன், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்ற பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

இது தொடர்பில் பலமுறை மத்திய அரசையும், பிரதமரையும் முதல் அமைச்சர் நேரிலும், கடிதம் வழியாகவும் கேட்ட வண்ணம் இருக்கிறார்.

மேலும், அண்மையில் பிரதமரிடம் அளித்த கோரிக்கை மனுவிலும் இதனை வலியுறுத்தி புள்ளி விவரங்களோடு முதலமைச்சர் எடுத்துரைத்திருக்கிறார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: