இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உடன்படிக்கையின்படி 1976ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது.
கச்சத்தீவை இலங்கைக்கு மத்திய அரசு விட்டுத்தர அப்போதைய முதல்வர் கருணாநிதியே காரணம் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அது அ.தி.மு.க வை நோக்கி திரும்பியுள்ளது.
இலங்கை ஜனாதிபதியுடன், அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி செய்து கொண்ட உடன்படிக்கை ஒருபக்கம் இருந்தாலும், அந்த உடன்படிக்கை அதிகாரபூர்வமாக நிறைவேற்ற வசதியாக வரைபடத்தையே மாற்றி அமைத்தது எம்.ஜிஆர் ஆட்சிக் காலத்தில்தான்’ என அண்மையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
1983ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியின்போதுதான் அன்றைய ராமாநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இந்திய வரைபடத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.
அதன் உத்தரவு நகல் இலக்கம், (RCF 23-75/83)” என அதிர்ச்சி கிளப்பியிருந்தார் திருக்கோவில் திருமடங்கள் அமைப்பின் மாநில அமைப்பாளர் பக்சி சிவராஜன்.
தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து, எம்.ஜி.ஆர் அரசில் அமைச்சராக அங்கம் வகித்த அரங்கநாயகத்திடம் கருத்து கேட்டிருந்தோம்.
கச்சத்தீவு இலங்கைக்கு வழங்குவது தொடர்பாக, அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்திற்கு, அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரால் அனுப்பிவைக்கப்பட்டவர் அரங்கநாயகம்.
கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட விவகாரத்தில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு என்பது எள்ளளவும் இல்லை.இது முழுக்க முழுக்க கருணாநிதியின் நடவடிக்கை.
அன்றைக்கு பல அரசியல் நெருக்கடிகளுக்குள்ளாகி இருந்தார் கருணாநிதி. அதன் காரணமாக பிரதமர் இந்திரா காந்தி எதைச் சொன்னாலும் தலையாட்டும் நிலையில்தான் இருந்தார்.
இந்திரா காந்தியை திருப்திப்படுத்துவதற்காக அவர் வளைந்துகொடுத்ததே கச்சத்தீவு நம்மை விட்டுப் போக காரணம் என்றார் அரங்கநாயகம்.
அன்றைய தினம் நடந்ததென்ன என்பது குறித்தும், எம்.ஜி.ஆர் மீதான குற்றச்சாட்டு குறித்தும் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
1976ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 24ஆம் திகதி கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவதற்கு மத்திய அரசால் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது.
அதற்கு முன்னதாக, அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க அரசு, அதுகுறித்து விவாதிக்க 1974ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 29ஆம் திகதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது.
அ.தி.மு.க பொதுக்கூட்டம் ஒன்றிற்காக நானும் எம்.ஜி.ஆரும் அப்போது திருச்சியில் இருந்தோம். விடயமறிந்த எம்.ஜி.ஆர், கருணாநிதி என்னவோ திட்டமிடுகிறார்.
எதிர்க்கட்சியாக அதை நாம் முறியடிக்கவேண்டும்’ என்றதோடு, எதிர்ப்பு தெரிவித்து ஒரு கடிதமும் கொடுத்தார்.
அதன்படி அ.தி.மு.க சார்பில் அக்கூட்டத்தில் நான் கலந்துகொண்டேன். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், ம.பொ.சி மற்றும் பிற தலைவர்களும் வந்திருந்த அக்கூட்டத்தில், ஆரம்பம் முதலே கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு சாதகமான முடிவெடுப்பதுபோலவே கருணாநிதியின் நடவடிக்கை இருந்தது.
காரணம், முன்னரே கச்சத்தீவு விவகாரத்தில் சாதகமான முடிவை அளிப்பதாக பிரதமர் இந்திரா காந்திக்கு உறுதியளித்திருந்ததே.
அதை அன்றைய மத்திய அமைச்சர் சவான், நாடாளுமன்றக் கூட்டத்திலேயே பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில், கச்சத்தீவு என்பது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம்’ என்று பேசி, அதை இலங்கைக்கு விட்டுக்கொடுப்பதற்கு அ.தி.மு.க.வின் பலமான எதிர்ப்பை பதிவு செய்தேன்.
‘கச்சத்தீவு எக்காரணம் கொண்டும் கைவிட்டுப்போகக்கூடாது. அதில் எந்த மாற்றம் தெரிந்தாலும் வெளிநடப்பு செய்யுங்கள்’ என எம்.ஜி.ஆர் என்னிடம் முன்னரே அறிவுறுத்தியபடி, கருணாநிதியின் அந்த முடிவை எதிர்த்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்து, வெளியேறினேன்.
மற்ற கட்சி உறுப்பினர்களும் அதே கருத்தில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த, கருணாநிதி வேறு வழியின்றி, சில சரத்துக்களுடன், கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவதற்கு மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்ற ரீதியில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினார்.
அ.தி.மு.கவின் பலமான எதிர்ப்பினால்தான், கச்சத்தீவு விவகாரத்தில் அனைத்துக்கட்சியினரின் சம்மதத்தின்படி, மத்திய அரசுக்கு சாதகமான தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டிருந்த கருணாநிதியின் திட்டம் பலிக்காமல் போனது.
அதன்பின் சட்டமன்றத்திலும் தொடர்ந்து எங்கள் கட்சியின் எம்.எல்.ஏக்கள் ஆலடி அருணா, கோவை செழியன் ஆகியோர் கச்சத்தீவு விவகாரத்தில், அ.தி.மு.கவின் எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்துவந்தனர்.
அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நடந்தவற்றை பொதுவெளியில் வராதவாறு, கருணாநிதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி சாமர்த்தியமாக மறைத்துவிட்டார்.
இதற்கு பின் மாநில சட்டமன்றத்தில் அதிகார்பூர்வ தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையிலேயே, தன்னிச்சையாக கச்சத்தீவை இலங்கைக்கு சொந்தமாக்கியது மத்திய அரசு.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை அப்போது பெரிய அரசியல் பிரச்னையாக்கப்படவில்லை.
விடுதலைப்புலிகளின் தமிழ் ஈழ போராட்டம் முன்னிலைப்படுத்தப்பட்டதால், கச்சத்தீவு விவகாரம் பின்னுக்கு சென்றுவிட்டது. இதுதான் நடந்த உண்மை.
இப்படி கச்சத்தீவு விவகாரத்தில், தமிழகத்திற்கு எதிராக எந்த ஒரு காலகட்டத்திலும் எம்.ஜி.ஆர் செயல்படவில்லை.
ஒருவேளை அன்று சட்டமன்றத்தில் அப்படி அலுவல் ரீதியான ஒரு தீர்மானம் நிறைவேற்ற இடம்கொடுத்திருந்தால், இன்று நாம் வழக்கு போட்டு நம் உரிமையை கோர சட்டப்படியான தகுதியைப் பெற்றிருக்கமுடியாது என்பதுதான் நிஜம். அதற்கு காரணம் எம்.ஜி.ஆர்தான்” என்றார்.
– Vikatan