டெல்லி: நாகா இன மக்களுக்கு தனிநாடு கோரும் நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சிலின் நிறுவனர்களில் ஒருவரான ஐசக் டெல்லியில் உடல்நலக் குறைவால் காலமானார்.
நாடு விடுதலை அடைந்த போது இந்தியாவுடன் நாகாலாந்து இணையவில்லை. நாகாலாந்து தனிநாடாக செல்வதற்கான ஐநாவின் மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அது தனிநாடாக இருந்தது.
அந்த நாகாலாந்தின் ராணுவத்தின் பெயர் நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில். பின்னர் நாகாலாந்து பகுதிகள் படிப்படியாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. நாகாலாந்தின் சில பகுதிகள் மணிப்பூருடனும் அஸ்ஸாமுடனும் இணைக்கப்பட்டன.
இன்னமும் நாகா இனமக்கள் வாழும் பகுதிகள் மியான்மர் நாட்டுக்குள் இருக்கின்றன. இந்தியாவுடன் நாகாலாந்து இணைந்த போதும் நாகா இனமக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து நாகாலிம் எனப்படும் தனிநாகாலாந்து அமைக்க வேண்டும் எனக் கோரி ஆயுதப் போராட்டம் வெடித்தது.
நாகாலாந்து சோசலிஸ்ட் கவுன்சில் (என்.எஸ்.சி.என்) என்ற பெயரில் இந்த விடுதலை இயக்கம் செயல்பட்டது. பின்னர் இது என்.எஸ்.சி.என் (ஐசக்-மூய்வா), என்.எஸ்.சி.என் (கப்லாங்) பிரிவு என 2 ஆக பிளவுபட்டது ஐசக்- மூய்வா பிரிவு மத்திய அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஆனால் கப்லாங் பிரிவு இந்திய ராணுவத்துடன் மோதி வருகிறது. இந்த நிலையில் என்.எஸ்.சி.என் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான ஐசக் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று சிகிச்சை பலனின்றி காலாமானார். அவரது வயது 86.
-http://tamil.oneindia.com