பாக்., வங்கதேசத்தில் இருந்து வந்த இந்து அகதிகளுக்கு ஆக.,15-ல் இந்திய குடியுரிமை… மத்திய அரசு தகவல்

pic02டெல்லி: பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவில் அகதிகளாக வந்து தங்கி இருக்கும் இந்துக்களுக்கு ஆகஸ்ட் 15-ந் தேதி இந்திய குடியுரிமை வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் கணிசமான தொகையில் இந்துக்கள் வசிக்கிறார்கள். அந்நாடுகளில் இந்துகள் சிறுபான்மையினர் என்பதால், பாதுகாப்பின்மை, பயம், தேவையில்லாத அச்சத்துடன் வாழ வேண்டிய நிலையில் அவர்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து நீண்டகால விசாவில் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள் சுமார் 2 லட்சம் பேர் அந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்லாமல், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

அவர்கள் நீண்டகால விசாவில் வந்து அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர் என்பதால், அவர்களின் இந்திய சலுகைகளை பெறுவதில் சிக்கல் உள்ளது. இதனிடையே, சில நிபந்தனைகளுடன் இந்தியாவில் சொத்துகள் வாங்கவும், வங்கி கணக்கு தொடங்கவும் அவர்களுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு தீர்மானித்திருந்தது. அதன்படி இந்து அகதிகள் வசித்து வரும், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்ரபிரதேசம், சட்டீஸ்கர், மகராஷ்ட்ரா, மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் ஒரு மாத காலம் முகாம் நடத்தப்பட்டது.

அப்போது, இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது மட்டுமல்லாமல், பான் கார்டு, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம் அவர்கள் சுயமாக தொழில் தொடங்கி தங்களுக்கான வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொள்வது என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக அரசு இதை முதன்மையான பிரச்சனையாக கருதி தீர்வு காணப்படும் என கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இது ஒரு மனிதாபிமான நடவடிக்கையே தவிர, இதற்கு உள்நோக்கம் எதுவும் இல்லை. அவர்கள் பாதுகாப்பு இல்லாமல் பயத்துடன் வாழ்வதை நாங்கள் விரும்பவில்லை.

இது தொடர்பான குடிமக்கள் சட்டம், குடியுரிமை விதிகள் சட்டம், பாஸ்போர்ட் சட்டம், வெளிநாட்டவர் சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்படும். அவ்வாறு கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் நிறைவேறினால், குடியேறியவர்களை சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என கூற முடியாது. அதன் பின்னர் அவர்களும் இந்திய குடியுமை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: