செல்போன் பேசியபடி நர்ஸ் ஊசி போட்டதால் குழந்தை இறந்ததாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை ஆதாம் நகரைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது, ஷாகிராபேகம் ஆகியோருக்கு 3 குழந்தைகள்.
நேற்று முன்தினம் நசீராபேகம்(2) என்ற குழந்தைக்கு திடீரென வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. இதனால் தஞ்சை வ.உ.சி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு நசீராபேகத்திற்கு உடல் நிலை மோசமானது. இதனால் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு ராஜாமிராசுதார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.
பெற்றோர் அந்த குழந்தையை இரவோடு இரவாக அரசு ராஜாமிராசுதார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி குழந்தை நேற்று அதிகாலை இறந்தது. உடனே சாகுல்ஹமீது குழந்தை நசீராபேகத்தின் சடலத்தை எடுத்துக் கொண்டு முன்பு சிகிச்சை பெற்ற தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
எனது குழந்தை இறப்பிற்கு இந்த மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சைதான் காரணம். உங்கள் மருத்துவமனையில பணிபுரிந்த நர்ஸ் செல்போனில் பேசிக்கொண்டு எனது குழந்தைக்கு ஊசி போட்ட பின்னர் தான் உடல்நிலை மோசமானது.
எனவே குழந்தை இறப்பிற்கு மருத்துவமனை நிர்வாகம் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறி முற்றுகையிட்டனர்.
பெற்றோர், மருத்துவமனை நிர்வாகத்தினரை அழைத்து பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சுமூக தீர்வு ஏற்படவே பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
-http://news.lankasri.com