பெண் பொறியாளர் சுவாதி கொலையில் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி கடந்த 24-ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற மர்ம வாலிபர் தப்பி ஓடிவிட்டார். ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் கொலையாளி சிக்கவில்லை.
அவன் தப்பிச்செல்லும் போது அருகில் உள்ள சி.சி.டி.வி கமராவில் பதிவான கொலையாளியின் உருவத்தை வைத்து தேடுகிறார்கள். ஆனால் அதில் முகம் தெளிவாக இல்லாததால் கொலையாளி யார் என்று அடையாளம் காண முடியவில்லை.
கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் பொலிஸார் தடுமாறி வந்தனர். இந்நிலையில் சுவாதியை கொலை செய்ததாக திருநெல்வேலியில் ராம்குமார் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொறியியல் பட்டதாரியான ராம்குமார் செங்கொட்டையை சேர்ந்தவர். இவர் கடந்த மூன்று மாதங்களாக சூளைமேட்டில் வசித்து வந்துள்ளார். சுவாதி கொலை செய்த்தை ராம்குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.
ராம்குமார் கைது செய்யப்பட்டது எப்படி?
கொலை நடந்து 8 நாட்கள் கடந்த பிறகும் குற்றவாளியை கைது செய்ய முடியாமல் போனதால் தமிழக பொலிஸாருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இந்த வழக்கில் நீதிமன்றம் தலையீட்டு குற்றவாளியை விரைவாக கைது செய்ய நெருக்கடி கொடுத்தது. இதனால் குற்றவாளியை விரைவாக கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
சுவாதியுடன் வேலை பார்த்தவர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உட்பட 100 பேருக்கு அதிகமானோரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினார்கள். ஆனாலும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ராம்குமாரை பொலிஸார் எப்படி சுற்றிவளைத்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
சுவாதியை கொலை செய்துவிட்டு, அவரது செல்போனை எடுத்துச்சென்ற குற்றவாளி போனை 10 நிமிடங்கள் மட்டும் ஆன் செய்துள்ளான். ஆன் செய்யப்பட்ட போது போன் இருந்த இடத்தை கொண்டு சூளைமேடு பகுதியில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
ஒரு தனிப்படை பொலிஸார் கணினி மூலம் வரையப்பட குற்றவாளியின் புகைப்படத்தை கொண்டு சூளைமேடு பகுதியில் வீடு வீடாக சென்று விசாரணை மேற்கொண்டார்கள்.
இதில் சுவாதியின் வீடு அருகில் இருக்கும் மேன்சன் ஒன்றின் வாட்ச்மேனிடம் பொலிஸார் நேற்று விசாரித்ததில், மேன்சனில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் ஒருவாரமாக அறைக்கு வரவில்லை என்ற தகவல் கிடைத்து.
இதனை அடுத்து அவரது அறையின் பூட்டை உடைத்து பொலிஸார் சோதனை நடத்தினார்கள். அறையில் அவரது வீட்டு முகவரி உட்பட இளைஞரை பற்றி கூடுதல் தகவல்களை கிடைத்துள்ளது.
இதனை அடுத்து நேற்று இரவு 12 மணியளவில் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் ராம்குமாரை அவரது வீட்டில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.
பொலிஸார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்று தெரிந்ததும் ராம்குமார் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை அடுத்து உடனடியாக அவரை மீனாட்சிபுரம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குற்றவாளிக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்பதால் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மயக்க நிலையில் இருக்கும் ராம்குமார் கண் விழித்து பேசினால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும்.
ராம்குமாரின் தந்தை, தாய் மற்றும் தங்கையிடம் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் இந்த கொலையில் ராம்குமாருக்கு அவரது நண்பர் ஒருவர் உதவி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
-http://www.tamilwin.com