சுவாதி படுகொலை நடந்து ஒரு வாரத்தை கடந்து, கொலையாளி கழுத்தை அறுத்துக்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளான்.
ராம்குமார் ஒரு படிக்காத பாமரன் அல்ல, ஒரு பொறியியல் பட்டதாரி.
கடந்த சில நாட்களாக கொலை தொடர்பாக வெளியான தகவல்களும் முதல் கட்ட விசாரணையும் ஒருதலை காதல் இருந்திருப்பதாக தெரிவிக்கிறது.
அது ஒரு உயிரை வேட்டையாடும் அளவுக்கு சீற்றெடுக்குமா? நம் கல்விமுறையின் நீதிபோதனைகள் மாணவர்களை பக்குவப்படுத்த தவறி இருப்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
பரிதாபத்தில் மதவாதம்
இந்த கொலைக்கு சம்பந்தமில்லாத பிலால் மாலிக் என்ற ஒருவனின் புகைப்படத்தை போட்டு, ஒரு பரிதாபத்திற்குரிய சம்பவத்தில் கூட தங்கள் கொள்கை நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள நினைக்கும் அற்பர்கள் சக்திவாய்ந்தவர்களாக இருப்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
குற்றவாளி பிடிபட்டால் உண்மை வெளிப்படும் மக்களின் வெறுப்பு தலைகீழாக மாறும் என்ற சிந்தனைகூட இல்லாத முட்டாள்தனம், அவர்களின் நேர்மை இல்லாத அணுகுமுறைக்கு பொருத்தமானதே.
சமூகத்தின் மனநிலை
இந்த படுகொலை நம் சமூகத்தின் மனநிலையையும் பிரதிபலிக்கிறது. இதுபோன்ற ஒருதலை காதல், சுவாதிக்கு முன்பும் பல பெண்களை பலிவாங்கியிருக்கிறது.
பெண்களை பற்றிய ஆண்களின் மனநிலை மாறாத வரையில் எதிர்காலத்தில் மற்ற பெண்களுக்கும் இது தொடராது என்ற உத்தரவாதமில்லை.
போதாகுறைக்கு சினிமா கலாசாரம் ஒருபுறம் இளைஞர்களின் பணத்தை பிடுங்க பெண்களை முரண்பாடாக சித்தரிக்கிறது.
‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா’ போன்ற பாடல்கள் வகையில் காதலிப்பவனை பதிலுக்கு காதலிக்காவிட்டால் இரக்கமில்லாதவள் என்றும், கொஞ்சநாள் பார்த்தோ பழகியோவிட்டு பிறகு விலகினால் துரோகி என்பதும் இவர்களே எழுதிக்கொள்ளும் சட்டங்கள்.
ஒரு பெண்ணுக்கு வீட்டிலும் இந்த சமூகத்திலும் இருக்கும் ஆணாதிக்க நெருக்கடிகள் ஒருபுறம், அவர்களுடைய உள்ளார்ந்த அபிலாசைகள் மறுபுறமுமாக கத்திமுனையில் நடப்பதுபோல வாழ்கின்றனர்.
அதை புரிந்துகொள்ள முடியாதவர்கள் ஒரு பெண் தன்னோடு பேசாவிட்டால் கோபம், தன்னோடு பழகும் பெண் இன்னொருவனோடு பேசினால் பொறாமை என ஆண்கள் பார்வையிலே பெண்களுக்கு வரம்புகளை விதிக்கிறார்கள்.
ஆண்கள் எண்ணப்படி, தங்கள் உணர்வு சுதந்திரத்தை அடக்கிக்கொண்டு, ஒருவனுக்கு ஒருத்தியாக பெண்கள் முற்றிலும் வாழ்ந்தாலும் முறைகேடாக முயற்சிப்பவனால் அப்போதும் பெண்கள் பலியாக்கவே படுவார்கள்.
ஆணும் பெண்ணும் இருவேறு உலகம்
ஒரேமாதிரி தெரியும் ஒருவருடைய இரண்டு கண்களிலே, அதன் பார்வையில் முற்றிலும் வேறுபாடு வைத்திருக்கிறது இயற்கை.
விலங்கானாலும் பறவைகளானாலும் அதன் தோற்றத்தை செயல்களை நாம் ஆராயவும் அளவிடவும் முடியுமே தவிர, அவற்றின் உணர்வுகளை அவைகளாக பேசாத வரை நாம் அறிந்துகொள்ளவே முடியாது.
அப்படித்தான் பெண்களும், உடலமைப்பால் ஆண்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட உலகத்துக்கு உரியவர்கள். பெண்கள் பேச முடிந்தவர்கள்தான் பேசினால், உலகம் புரிந்துகொள்ளக் கூடும்.
ஆனால், அவர்கள் பேசுவதற்கு முன்பே சமூகம் இப்படித்தான் பேசவேண்டும் என்ற விதிகளை காட்டுகிறது. மௌனம் காக்கவும் மாற்றிப்பேசவும் கற்றுத்தந்துவிடுகிறது.
ஒரு பெண்ணின் மனம் கடலைவிட ஆழமானது என்று வியப்போடு புதிதாக பார்ப்பதற்கு காரணம், பெண்களின் சகஜமான மனநிலை சமுதாயத்தில் மிக அரிதாகவே பதிவுசெய்யப்படுவதுதான்.
பெண்கள் காதலிக்காவிட்டாலும், ஒருவனை காதலித்துவிட்டு வேறொருவனை மணந்தாலும், கணவனிருக்க இன்னொருவனோடு செல்ல துணிந்தாலும் அது துரோகமா? சுதந்திரமா? என்ற கருத்துநிலை வேறு.
அதற்காக, அவர்களை சிதைப்பது சரியல்ல. அவள் தவறை விழுங்கிவிட்டு, நீ பெரிய குற்றவாளியாவதும் ஒரு தீர்வல்ல.
பெண்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதைவிட, அவர்கள் ஆண்களை ஏமாற வைப்பதற்காகவும் நட்சத்திரம் போலவும் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.
-http://news.lankasri.com
இதனால் தான் என்னவோ நம் முன்னோர்கள் தம் பிள்ளைகளின் வாழ்க்கை துணையை அவர்களே முடிவு செய்தார்களோ. இது போன்ற இழி செயல்களை தடுக்க. இச் சம்பவத்தில் இருந்து சமூகம் பாடம் கற்றுக் கொண்டால் நல்லது.
இந்தியாவின் கல்வி இன்றும் விக்டோரியா காலத்தை சேர்ந்தது. காலத்தின் முன்னேற்றத்திற்கு ஒத்துவராது. நல்ல அறிவை பகுத்தறிவையும் நல்ல எண்ணங்களையும் படிப்பிப்பது இல்லை– தமிழ் திரைப்படங்களில் வரும் பழிக்குப்பழி அரிவாள் கலாச்சாரம் மாட்டராக கீத்தர எண்ணங்களை கொண்ட மனப்பான்மை. தமிழ் படங்களில் வரும் நகைச்சுவை நகைச்சுவையா? மற்றவர்களை மரியாதை இல்லாமல் திட்டுவது நகைச்சுவையா? பெற்றோர்களை மரியாதை இல்லாமல் பேசுவது தமிழர்களின் கலாச்சாரமா? இப்படி இருக்கையில் இவனைப்போன்ற படித்தவன்கள் அறிவிலித்தனமாக நடப்பது ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அத்துடன் தெற்கு ஆசியாவில்தான் பெண்களின் மேல் அமிலம் ஊற்றி அநியாயம் பண்ணும் ஈன ஜென்மங்கள் இருக்குமிடம். அங்கு நடக்கும் அநியாயங்களுக்கு அளவில்லை– கற்பழிப்பு வேறு — பெண்களின் இல்லை என்ற வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் ஆனால் தமிழ் திரைப்படங்களில் இல்லை என்று வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பது இல்லை அத்துடன் கடைசியில் பெண் அந்த இளைஞனைகாதலிப்பாளாம்– இது என்ன மடத்தனம்? இந்த மடையனும் அப்படி நடக்கும் என்று நினைத்திருப்பான்.