‘தலித் உணவுகள்‘ என்ற பெயரில் பலவகையான உணவு பொருட்களை விற்பனை செய்வதை தலித் சிந்தனையாளர் சந்திரபான் பிரசாத் அண்மையில் தொடங்கியுள்ளார்.
மாங்காய் ஊறுகாய், மஞ்சள், ஆளி விதைகள், கொத்தமல்லித் தழை, மிளகாய் வற்றல் மற்றும் பிற பொருட்கள் பலவற்றை இணையதளம் வழியாக இனி வாங்கிக் கொள்ளலாம்.
இந்த இ-வணிக வியாபாரத்திற்கு dalitfoods.com மற்றும் dalitshop.com என்று இரண்டு இணைய தளங்களைத் தொடங்கியுள்ளதாக சந்திரபான் பிரசாத் தெரிவித்திருக்கிறார்.
“2008 ஆம் ஆண்டு அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கான என்னுடைய ஆய்வுப் பணியின் போது, தலித் காலனி ஒன்றில் வாழும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு தங்களுடைய 90 வயதுகளில் இருக்கின்ற பலரை சந்தித்தேன். நாட்டிலுள்ள பிறரோடு ஒப்பிடுகையில் தலித் ஒருவரின் சராசரி வயது குறைவாக இருக்கும் என்பதால் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அங்கு தங்கியிருந்தது அவர்களை பற்றியும், அவர்களது உணவை பற்றியும் அறிய எனக்கு உதவியது” என்று தலித் உணவுகள் விற்பனையை தொடங்கியதைப் பற்றி சந்திரபான் பிரசாத் பிபிசியிடம் பேசியபோது கூறினார்.
“இன்றைய ஆரோக்கிய உணவுகள், முந்தைய தலித் உணவுகள்தான்”
தலித்துகளின் உணவு வழக்கத்தை பற்றிக் கூறுகையில் “கிராமங்களுக்கு வெளியே தலித் குடியிருப்புகளை நீங்கள் காணலாம். அவர்களுக்கு மூலவளங்கள் குன்றியிருக்கும். அதனால் தான் 90 வயதுகளில் வாழ்ந்து வந்த தலித் மக்களை பார்த்தவுடன் எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. சிலர் 100 வயதை கூட நெருங்கியிருந்தனர். அவர்கள் தினை மற்றும் சோள சப்பாத்திகளைச் சாப்பிடுவது பற்றி எனக்குத் தெரிவித்தனர். முதன் முதலாக கோதுமையாலான சப்பாத்தியை சாப்பிட்டபோது, அவர்கள் அனைவருக்கும் வயிற்று கோளாறுகள் எற்பட்டதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியமடைவீர்கள்” என்றார் சந்திரபான்.
சுமார் 8 ஆண்டுகள் தலித்துகளுடன் பழகிய பின்னர், சந்திரபான் “தலித் ஃபுட்ஸ்” என்ற நிறுவனத்தை, 5 லட்ச ருபாய் முதலீட்டுடன் தொடங்கினார்.
ஆனால், இந்திய சந்தையில் ‘தலித்‘ என்கிற வணிகச் சின்னத்தில் பொருட்களை விற்பது எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும்?
இந்த கேள்விக்கு சந்திரபான் பதிலளிக்கையில், “இப்போது நாம் எடுத்து கொள்ளும் ஆரோக்கியமான உணவுகள், ஒரிரு தலைமுறைகளுக்கு முன்னால், தலித்துகளின் முக்கிய உணவு வகைகளாக இருந்தன. நீரிழிவு மற்றும் இதய நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிற தினை மற்றும் பார்லி, தலித்துகளின் வழக்கமான உணவின் ஒரு பகுதியாக இருந்துள்ளன”.
“முயற்சி மாற்றத்தைத் தரும்”
இந்த வணிகச் சின்னம் சமூக அளவில் ஏற்று கொள்ளப்படுமா என்பதற்கு பதிலளிக்கையில் சந்திரபான், ”தலித்துக்களின் மேம்பாட்டை, அவர்களின் திறமைகள் வெளிவர விரும்புகின்ற மக்களை சென்றடைவதே நம்முடைய குறிக்கோள். அப்படிப்பட்ட மக்கள் நம்முடைய சமூகத்திலும், சந்தையிலும் உள்ளனர்”, என்றார்.
ஆனபோதிலும், அவருடைய முயற்சி, மாற்றத்தை கொண்டுவரும் என்று சந்திரபான் நம்புகிறார்.
“இந்த பொருட்களை உயர் வகுப்பினர் பயன்படுத்தும்போது பரப்பப்படும் செய்தியினை சற்று எண்ணிப் பார்க்கவும். சாப்பிடுவதற்கு நாங்கள் எப்போதும் தனி வரிசையில் அமர வைக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் பாத்திரங்களை உயர் வகுப்பினர் ஒருபோதும் தொட்டதில்லை. இத்தகைய பாகுபாடுகளுக்கு இடையில் அவர்கள் எங்களுடைய பொருட்களை பயன்படுத்தும்போது, அது சுதந்திரத்தை பெற்றது போன்ற உணர்வைத் தரும்” என்கிறார் சந்திரபான்.
சந்திரபான் வெளிப்படுத்தும் நம்பிக்கையில் ஒரு பொருள் தென்படுகிறது. அவருடைய இந்த பெரு முயற்சிக்கு இந்திய தொழில்துறைகள் கூட்டமைப்பு ஆதரவு அளிக்கிறது.
dalitfoods.com இணையதளம் அவருடைய தொகுதி பொருட்களை மட்டுமே விற்கும்.
அதேவேளை dalitshop.com இணையதளத்தில் எந்த தலித்தும் அவருடைய பொருட்களை விற்கலாம்.
இது இ-வணிக உலகத்தில் நுழைவதற்கு தலித்துகளுக்கு ஒரு மேடையை வழங்குவது போன்றதாகும். இதுவே தனிச் சிறப்பு மிக்கதொரு முயற்சியுமாகும்.
ராம்தேவ், ரவி சங்கருடன் போட்டி போட முடியுமா?
அவருடைய பொருட்களை பற்றி பேசுகிறபோது, “எங்களுடைய மஞ்சள், மகாராஷ்ராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட வார்தா பண்ணைகளில் வளர்க்கப்பட்டவை. அதேவேளை கொத்த மல்லித் தழை, புந்தேல்கான்டில் இருந்து வருகிறது. வத்தலை ராஜஸ்தானின் மாதானியாவில் இருந்து பெறுகிறோம்” என்று அவர் விவரிக்கிறார்.
இத்தகைய பொருட்கள் யோகா குரு ராம்தேவ் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் ஆகியோராலும் உற்பத்தி செய்யப்படுகிறதே. அவர்களிடமிருந்து சந்திரபானின் பொருட்கள் எவ்வாறு வேறுபட்டிருக்கும்?
“அவர்களுடைய வணிகம் பெரியது. மாட்டு சாணியிலிருந்து ஜஸ் கிரீம் செய்து கொடுத்தாலும் மக்கள் அதனை வாங்குகின்ற அளவுக்கு பாபா ராம்தேவ் பெரும் புகழைப் பெற்றிருக்கிறார். என்னுடைய முயற்சி மிகவும் சிறியது. அதனால் என்னுடைய உற்பத்தியும் குறைவாகவே இருக்கும்”, என அவர் கூறுகிறார்.
தலித் உணவு பொருட்களை பற்றி கூறுகையில், “எங்களுடைய ஊறுகாய், அமிலம் குறைந்தது. சப்பாத்தியும், ஊறுகாயும் வைத்து சாப்பிடுகிற சமூகப் பிரிவினரை மனதில் வைத்து உற்பத்தி செய்யப்பட்டது”, என்று சந்திரபான் விளக்குகிறார்.
சந்திரபான் தலித் சிந்தனையாளர். அத்தோடு தலித்துக்களை வணிக உலகத்தோடு இணைக்கின்ற பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்போடு, தலித்துகளுக்கு வர்த்தக மற்றும் தொழில் கழகத்தை உருவாக்குவதற்கு இவர் காரணமாக இருந்துள்ளார்.
தலித் உணவுகளை உண்போர் நூறு வயது வரை வாழ்வர் என்று சந்திரபான் தெரிவிக்கிறார்.
தலித்துக்கள் மட்டும் தான் அவருடைய பரப்புரையின் பகுதியாக இருப்பார்களா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “தலித் அல்லாதவர்களும் இந்த பரப்புரையில் இணையலாம். நாங்கள் அவர்களை வரவேற்கிறோம். தொடக்கத்திலேயே உயர் வகுப்பை சேர்ந்த வணிகப் பங்குதாரர் ஒருவர் எங்களோடு இணைந்துள்ளார்” என்று அவர் கூறினார். -BBC