அப்துல் கலாமை சுத்தமாக மறந்து போன மத்திய அரசு.. கிடப்பில் போடப்பட்ட நினைவிடப் பணிகள்!

APJ.Abdul kalam 07ராமேஸ்வரம்: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடப் பணிகள் நத்தையை விட மிக மிக மெதுவாக நடந்து வருகின்றன. நடந்து வருகின்றன என்று சொல்வதை விட கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.

கலாம் மறைந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது. கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி ஷில்லாங் போயிருந்தபோது மரணமடைந்தார் கலாம். அவரது உடல் ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அந்த இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்காக தமிழக அரசும் இடம் ஒதுக்கியது. ஆனாலும் இன்னும் அந்தப் பணிகள் வேகம் பிடிக்கவில்லை. மந்த கதியிலேயே உள்ளன. இது கலாமை நேசித்த அத்தனை பேரையும் ரத்தக் கண்ணீர் வடிக்க வைப்பதாக உள்ளது.

கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அறிவு மையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கான திட்டங்களையும் அறிவித்தது. இதற்காக தமிழக அரசும் உடனடியாக 1.36 ஏக்கர் நிலத்தையும் வழங்கியது.

ஆனால் இதுவரை மத்திய அரசு அங்கு தனது வேலையை ஆரம்பிக்கவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. ஏன் இந்த தாமதம், அலட்சியம் என்பதும் புரியவில்லை.

மத்திய அரசு அதிகாரிகள் அடிக்கடி வருகிறார்கள். ஆய்வு செய்கிறார்கள். போகிறார்கள். அடக்க ஸ்தலத்தை சுற்றிவேலி அமைத்துள்ளனர். அது மட்டும்தான் இங்கு நடந்துள்ள ஒரே வேலையாகும்.

அடுத்து மழைக்காலம் வரப் போகிறது. அதற்குள் கட்டுமானப் பணிகள் முடிந்தால் நல்லது என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால் வேலையை எப்போது மத்திய அரசு ஆரம்பிக்கும் என்பதே தெரியவில்லை.

அதேசமயம், கலாமுக்கு தலைநகர் டெல்லியில் நினைவிடம் அமைக்கும் பணியில் டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசு படு வேகமாக உள்ளது. ஜூலை 27ம் தேதி ஏற்கனவே அறிவித்தபடி கலாம் நினைவிடம் திறக்கப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இங்கு கலாம் பயன்படுத்திய பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

tamil.oneindia.com

TAGS: