ட்ரென்டன் (யு.எஸ்): வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவையின் 2016 விழா தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்பட்டது.
விழாவின் கடைசி நிகழ்ச்சியாக ‘தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு கருத்தரங்கம்: தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிய கருத்தரங்கத்தில், பன்னீர்செல்வம் வரவேற்றுப் பேசினார்.
அறிவியல் தமிழ் என்ற தலைப்பில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் செ.முத்துசாமி உரையாற்றினார். தனித் தமிழின் தேவை குறித்து மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறை தலைவர் பேராசிரியர் இரா.மோகன் வலியுறுத்தினார். ஏன் இந்த ‘ஃபண்ணித் தமிழ்’ என்ற தலைப்பில் பேசிய முனைவர் இர.பிரபாகரன், தமிழ்மொழி எப்படியெல்லாம் பிற மொழிகளால் சிதையுறுகிறது என்று எடுத்துரைத்தார். தனித்தமிழ் நூற்றாண்டில் தமிழா எழுச்சி கொள் என்று பெருங் கவிக்கோ வா.மு.சேதுராமன் எழுச்சிக் கவிதை வடித்தார்.
இன்றைய நவீன காலக் கட்டத்தில், அடுத்த தலைமுறையினரை கவரும் வகையில் தனித் தமிழை எவ்வாறு நடைமுறைப்படுத்தச் செய்யலாம் என்று வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க தலைவர் ச. பார்த்தசாரதி வழிமுறைகளை குறிப்பிட்டார். ராஜராஜ சோழனால் கூட முடியவில்லையே! தனித் தமிழின் தேவை குறித்து பேசிய, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தமிழ்த்துறை பேராசிரியர் அ.இராமசாமி, ராஜராஜ சோழ மன்னன் காலத்திலேயே, தமிழ் மொழியில் வடமொழியின் தாக்கம் அதிகமாக இருந்தது.
தரணி ஆண்ட தஞ்சைப் பெரும் மன்னராலே கூட மொழிக் கலப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மறைமலை அடிகளார் தனித் தமிழ் இயக்கத்தை தோற்றுவித்து இருக்காவிட்டால், நம் தமிழ் மொழியை என்றோ இழந்திருப்போம். வேற்று மொழிகளை, தமிழ் எழுத்து வடிவத்தில் எழுதிக் கொண்டு அதை தமிழ் என்று சொல்லிக் கொண்டிருந்திருப்போம்.
தமிழர்கள் வேற்றுமொழிகளுக்கு எதிரானவர்கள் அல்ல. தனித்தமிழ் இயக்கத்தின் நோக்கம் மற்ற மொழிகளுக்கு எதிரானதும் அல்ல. நம் மொழியை பிற மொழிகளின் கலப்பிலிருந்து காப்பது தான் தனித் தமிழ் இயக்கத்தின் கொள்கையாகும். பள்ளிகளில் மும்மொழி மட்டுமல்ல ஐந்து மொழிகளைக் கூட, விருப்பம் இருப்பவர்கள் கற்றுக்கொள்ள அனுமதிக்கலாம்.
ஆனால் தாய் மொழியைத் தவிர அனைத்தும் தொடர்பு மொழிகளே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தாய் மொழியான தமிழை, முதல் மொழியாக பள்ளிகளில் கற்றுத் தர வேண்டும். தற்போது ஆங்கிலம் என்ற தொடர்பு மொழி இரண்டாம் மொழியாக இருக்கிறது. இந்த இரண்டையும் தள்ளி வைத்து விட்டு, இன்னொருதொடர்பு மொழியான இந்தியை முதல் மொழியாக கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது. இது சமஸ்கிருதத்தை மீண்டும் கொண்டு வருதற்கான முதல் முயற்சியே ஆகும். இதை நாம் முந்தய காலக்கட்டத்தைக் காட்டிலும் வலிமையாக எதிர்க்க வேண்டி உள்ளது.
நூறாண்டுகள் கடந்த பின்னரும் தனித் தமிழுக்கான தேவை முன்னெப்போதையும் விட அதிகரித்திருக்கிறது,” என்றார். தனித்தமிழ் இயக்கம் தோன்றிய வரலாறு, செயல்பாடுகள் குறித்து பேராசிரியர் நாகராசன் எடுத்துக் கூறினார். குழந்தைகளிடம் தனித்தமிழ் ஏன் போய்ச் சேரவில்லை ? சுபா செல்லப்பன் ஒருங்கிணைப்பில் தமிழ்ப் பள்ளி மாணவ மாணவிகளின் பட்டிமன்றம் நடைபெற்றது. பேராசிரியர் இரா.மோகன் நடுவராகப் பங்காற்றினார்.
குழந்தைகளிடம் தனித் தமிழ் போய்ச் சேராமல் இருப்பதற்குக் காரணம் பெற்றோர்களா, சமுதாயமா என்ற தலைப்பில் பேசினார்கள். உறவுகளை மாமா, அத்தை என்று பெற்றோர்கள் தமிழில் சொல்லித் தருவதில்லை, பாபா ப்ளாக்ஷிப் என்று சொல்லிக்கொடுப்பவர்கள் ஆத்திச் சூடியையும் பாரதியார் பாடல்களையும் மறந்ததேன்? அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைத்தே பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்களைத் தவிர்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள்.
இயல் இசை நாடகம் என்று முத்தமிழும் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில், பிற மொழிக் கலப்பில் சிக்கித் தவிக்கிறது. தமிழ் திரைப்படப் பாடல்களில் டாடி மம்மி வீட்டில் இல்லே. ஒய் திஸ் கொலைவெறி என்று ஆங்கிலத்தைத் தானே இந்தச் சமுதாயம் சொல்லித் தருகிறது. பின்னர் எப்படித் தனித்தமிழ் குழந்தைகளிடம் சென்று சேரும் என்றும் கேள்விகளை எழுப்பினார்கள்.
சோறு என்பதை சாதம் என்றும், லைட் ஐப் போடு, சேரில் உக்காரு, ஃபேனை ஆஃப் பண்ணு என்று தானே பெற்றோர்கள் சொல்லித் தருகிறார்கள். குழந்தைகள் கண்டபடி பேசுவதில்லை. கண்டதை மட்டுமே பேசுகிறார்கள் என்று பெற்றோர்களுக்கு குட்டும் வைத்தார்கள். சீர் தூக்கிப் பார்த்தால், பெற்றோர்களுக்கும் சமுதாயத்திற்கும் தனித் தமிழ் இயக்கத்தில் சமமான பங்கிருக்கிறது என்று நடுவர் இரா மோகன் பட்டிமன்றத்தை முடித்து வைத்தார்.
தீர்மானங்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தலைவர் நாஞ்சில் பீட்டர் விவரித்தார். அவை வருமாறு:
1. தனித்தமிழ் இயக்கத்தினை மீண்டும் முனைப்புடன் முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், உலகத் தமிழர்களுக்கும் தமிழ் அமைப்புகளுக்கும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை விரும்பி வேண்டிக்கேட்டுக் கொள்கிறது
2. வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை விழாக்களிலும், இடையேயும் தனித் தமிழ் இயக்கத்தைப் பரப்ப பேரவை உறுதி பூண்டுள்ளது. 2026 வரையிலான அடுத்த பத்தாண்டுளை ‘ தனித்தமிழ் இயக்க மறுமலர்ச்சிக் காலம்’ என்று அறிவித்து அதற்கான திட்டங்களுடன் பேரவை செயல்படும்.
3. உறுப்பினர் சங்கங்களின் தனித் தமிழ் வளர்ச்சியில் ஆர்வம் உள்ள தன்னார்வர்களைக் கொண்டு உரிய குழுக்கள் அமைக்கப்படும். பிறமொழி கலவாமல் சரியான இலக்கணத்துடன் தமிழில் உரையாடல், மேடையில் பேசுதல், எழுதுதல், கதைகள் கட்டுரைகள் படைத்தல் ஆகியவற்றிற்கு பயிலரங்குகள் நடத்தப்படும்
4. வரும் தலைமுறைகளுக்கும் தமிழை தக்க வைக்கவும், தழைக்க வைக்கவும், தமிழ் மொழிக் கல்வி வளர்ச்சிக்கு பிற அமைப்புகளுடன் இணைந்து பேரவை பணியாற்றும்.
5. தமிழ் மொழிக் கல்வி வளர்ச்சியோடு, தமிழ்வழிக் கல்விக்கும், அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கும் பேரவை துணையிருக்கும். சரியான தன்னார்வலர்களை அடையாளம் கண்டு உரிய அமைப்புகளுடன் அவர்கள் இணைந்து பணியாற்ற வழிவகுக்கும்.
6. தாய்த் தமிழ் செழித்து வளர, தமிழ்த் தொண்டு செய்து வரும் அனைத்து தமிழர்களும், வேறுபாடுகளைக் களைந்து இணைந்து செயல்பட பேரவை வேண்டிக்கேட்டுக் கொள்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழறிஞர்களின் நூற்றாண்டு விழாக்களாக கொண்டாடப்பட்டு வரும் ஃபெட்னா தமிழ் விழா இந்த ஆண்டு ‘தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா’வாக அமைந்தது சிறப்பு வாய்ந்ததாகும் . அமெரிக்காவில் அடுத்த தலைமுறை தமிழர்களிடம் தமிழ் மெல்ல மெல்ல வளர்ந்து வரும் நிலையில், இந்த தமிழ் விழா,அங்கே தனித்தமிழ் வளர்ச்சிக்கு வித்துட்டுள்ளது என்று நம்பலாம். -இர தினகர்