ஐ.எஸ் தொடர்பு விவகாரம்: கேரளாவில் 21 பேரை காணவில்லை என சட்டசபையில் பினராயி விஜயன் தகவல்

Keralaதிருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், கல்வி பயில்வதற்காக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றனர். ஒரு மாதத்திற்கு முன்பு மாயமான அந்த இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்று, இதுவரை தெரியவில்லை. 30 வயதிற்குட்பட்ட அந்த இளைஞர்கள் அனைவரும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்திருக்கலாம் என, உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து கேரள அரசுக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்த நிலையில், மாயமானவர்கள் குறித்து விசாரணை நடத்த, கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பினராயி விஜயன் இன்று பதில் அளித்தார். அப்போது கூறியதாவது:-

முதல்கட்ட தகவலின்படி காணாமல் போனவர்களில் 17 பேர் காசர்கோடு பகுதியை சேர்ந்தவர்கள். 4 பேர் பாலக்காடு பகுதியினை சேர்ந்தவர்கள்.

காசர்கோடு பகுதியில் காணாமல் போனவர்களில் 4 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் அடங்குவர். பாலக்காட்டில் இருந்தும் இரண்டு பெண்கள் காணவில்லை.

இவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக வெளியேறியுள்ளனர். ஊடகங்களில் வந்துள்ள தகவலின் படி அவர்கள் சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும், அங்குள்ள ஐ.எஸ் முகாம்களில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது. இந்த விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும் முயற்சியை அரசாங்கம் அனுமதிக்காது.

கேரள அரசாங்கள் இந்த விவகாரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிறுவனங்களுக்கு ஆதரவாக தேவையான நடவடிக்கைகள் செய்வோம்.

அனைத்து வகையான தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள கேரள அரசு உறுதி பூண்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துவிட்டதாகக் கருதப்படும் கேரளத்தைச் சேர்ந்த இளம்பெண்ணின் தாய், அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்துப் பேசினார். அப்போது, தனது மகளைத் தேடித் தருமாறு முதல்வரிடம் அவர் கோரிக்கை மனு அளித்தார்.

-http://www.maalaimalar.com

TAGS: