“காஷ்மீரில் அண்மையில் ஏற்பட்ட கலவரத்துக்கு முக்கியக் காரணமாக இருந்தது பாகிஸ்தான்’ என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.
காஷ்மீரில் ஏற்பட்ட வன்முறை குறித்து மக்களவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் பதிலளித்துப் பேசிய ராஜ்நாத் சிங் கூறியதாவது:
காஷ்மீரில் இப்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. காஷ்மீரில் பிரச்னைகள் ஏற்படுவதற்கு பாகிஸ்தான் தான் முக்கியக் காரணம். அண்மையில் காஷ்மீரில் ஏற்பட்ட வன்முறையின் பின்னணியிலும் அந்நாட்டின் தூண்டுதல் உள்ளது.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்ட நாளை கருப்பு தினமாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை. தனது தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப அந்நாடு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. இந்தியாவில் எங்கு பயங்கரவாதம் தலைதூக்கினாலும், அது பாகிஸ்தானால் தூண்டப்படுவதாகவே உள்ளது.
மாற்று ஆயுதங்கள்:
காஷ்மீரில் வன்முறையாளர்களைக் கலைக்க உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத துப்பாக்கிகள், கண்ணீர் புகைக் குண்டுகள் ஆகியவற்றையே பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், குண்டு காயத்தால் ஒருவர் உயிரிழந்ததாகவும், கண்ணீர் புகையால் பலருக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், காயம் அதிகமுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. எனவே, பாதுகாப்புப் படையினருக்கு மாற்று ஆயுதங்கள் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் வன்முறையில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தோருக்கு ஆறுதலையும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கிறேன். வன்முறையைக் கட்டுப்படுத்தும்போது அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டுமென்று பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழப்பு விவரம்:
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது காஷ்மீரில் இந்த ஆண்டில் பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழப்பு குறைவாகவே உள்ளது. பர்ஹான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகளில் பொதுமக்களில் 38 பேர் இறந்துள்ளனர். 2,180 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 2,055 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பிவிட்டனர். பாதுகாப்புப் படை வீரர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 1,739 பேர் காயமடைந்துள்ளனர்.
வெறுப்புணர்வு வேண்டாம்:
மதத்தின் பெயரால் காஷ்மீர் இளைஞர்களை பாகிஸ்தான் தூண்டிவிடுகிறது. காஷ்மீர் இளைஞர்களும் நாட்டுப் பற்றுடையவர்கள்தான். அவர்களுக்கு சிலர் தவறாக வழிநடத்துகிறார்கள். இதனால் இந்தியா மீது தேவையற்ற வெறுப்புணர்வை அவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள். மாவோயிஸ்டுகளால் வன்முறை நடைபெறும் பகுதிகளிலும் இதுபோன்ற வெறுப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
ஒருமைப்பாட்டைக் காப்போம்:
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா விரைவில் தில்லி வர இருக்கிறார். அவருடன் ஆலோசனை நடத்திய பிறகு காஷ்மீருக்கு அனைத்துக் கட்சிகள் அடங்கிய குழுவை அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படும். காஷ்மீருக்குச் சென்று அங்குள்ள மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களது பிரச்னைகளுக்குப் பேசித் தீர்வுகாண வேண்டும் என்பதே எனது விருப்பம். நமது தேசத்துக்கு எதிராக சவால்கள் தோன்றிய வண்ணம் உள்ளன. இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார்.
“ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாக். வெளியேற வேண்டும்’
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டுமென இந்தியா உறுதிபடத் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீரில் வன்முறை ஏற்பட்டது. இந்நிலையில், பர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அதிர்ச்சி தெரிவித்தார். பர்ஹான் வானி கொல்லப்பட்ட நாளை கருப்பு தினமாக பாகிஸ்தான் அறிவித்தது. மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக ஊர்வலங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஐ.நா.விலும் இந்த விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியதுடன், பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரையும் அழைத்து கண்டித்தது.
இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்த விகாஸ் ஸ்வரூப் இது தொடர்பாகக் கூறியதாவது:
ஐ.நா.வால் தடைவிதிக்கப்பட்ட பயங்கரவாத இயக்கங்களின் ஆதரவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல்வேறு ஊர்வலங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருவதாக தகவல் வந்துள்ளது. பயங்கரவாத இயக்கங்களையும், வன்முறையையும் ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன். சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் இருந்தும் பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும் என்றார் அவர்.
-http://www.dinamani.com