பலி எண்ணிக்கை 50ஆக உயர்வு: காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு

Burhan-Waniகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான் வானியும், அவரது கூட்டாளிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து கடந்த 9–ந்தேதி முதல் அங்கு வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த வன்முறை காரணமாக ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதுகாப்பு படையினர் உள்பட காயமடைந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் ஸ்கிம்ஸ் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த பந்திப்போராவை சேர்ந்த முதாசிர் அகமது ஷா என்ற போலீஸ்காரர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இத்துடன் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

காஷ்மீரில் கடந்த 16 நாட்களாக அடிக்கடி நிகழ்ந்து வரும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு இருந்தது.

அனந்த்நாக், குல்காம், குப்வாரா, புல்வாமா மற்றும் சோபியான் மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது. இதைப்போல ஸ்ரீநகரின் பெரும்பாலான பகுதிகளிலும் தீவிர ஊரடங்கு நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்து வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த பகுதிகளில் பால், காய்கறி வியாபாரிகளையும் பாதுகாப்பு படையினர் அனுமதிக்காததால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியுள்ளது.

-http://www.nakkheeran.in

TAGS: