ஐ.எஸ் ஆதரவாளர்கள் 54 பேர் இதுவரை கைது: மத்திய அரசு தகவல்

is flagநாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு, உள்துறை அமைச்சக இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர், செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:

ஐ.எஸ். இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பும், மாநில காவல் துறைகளும் பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளன.

இதுவரை கிடைக்கப் பெற்ற தகவலின்படி, நாட்டில் தற்போது வரை 54 ஐ.எஸ். ஆதரவாளர்கள் அல்லது சிந்தனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் அவர்கள் பயங்கரவாத தாக்குதலை தொடுப்பதற்கு முன்பாகவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞர்கள் சிலர் பல்வேறு நிகழ்வுகளில் ஐ.எஸ். கொடிகளை காண்பித்துள்ளனர். இதுபோன்ற நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்த மாநில அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு கேள்விக்கு ஹன்ஸ்ராஜ் தாக்கல் செய்த பதிலில், கடந்த 2014-ஆம் ஆண்டு நாடெங்கிலும் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://news.lankasri.com

TAGS: