வேலூர்: பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் விழுந்து உயிரிழந்த விவசாயி சீனு உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் குதித்த அவரது குடும்பத்தினரை ஆந்திர போலீஸாரும், அதேபோல தமிழக போலீஸாரும் குழப்பியும், மூளைச் சலவை செய்தும் உடலை வாங்க வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன.
புல்லூரில் உள்ள தடுப்பணையை ஆந்திர அரசு, தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி உயர்த்திக் கட்டியுள்ளது. தற்போது அது நிரம்பியுள்ளது. இதனால் தமிழகப் பகுதிக்கு வர வேண்டிய தண்ணீர் வரவில்லை. இதன் காரணமாக தமிழக பகுதி விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.
இந்த நிலையில் அந்த தடுப்பணையைப் பார்வையிடச் சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த விவசாயி சீனு என்பவர் தடுப்பணையில் விழுந்து விட்டார். அவர் தற்கொலை செய்ததாக தகவல்கள் பரவவே பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அவர் தடுமாறிதான் விழுந்தார் என்று தமிழக அரசு அவசரம் அவசரமாக விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் மீட்கப்பட்ட விவசாயி உடலை முதலில் ஆந்திரப் போலீஸார்தான் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். அங்கு குன்னம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. அப்போது அவர் குடிபோதையில் விழுந்து விட்டதாக கூறி பிரேதப் பரிசோதனை அறிக்கையை தயார் செய்து கையெழுத்துப் போடுமாறு கூறினார்களாம். இதை ஏற்க மறுத்த சீனு குடும்பத்தினர் உடலை வாங்க மாட்டோம் என்றும் கூறி விட்டனர்.
இதையடுத்து தமிழக காவல்துறை தலையிட்டுள்ளது. தவறி விழுந்தார் என்று கூறினால்தான் அரசு உதவி, நிதியுதவி எல்லாம் கிடைக்கும் என்று கூறப்பட்டதாம். நீண்ட நேரம் இதுபோல பேசி சீன குடும்பத்தினரை சம்மதிக்க வைத்து பின்னர் உடலை வாங்கச் செய்துள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே, சம்பவம் நடந்த இடத்தை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை நேரில் பார்வையிடவுள்ளாராம்.