சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை, தமிழ்நாடு உயர்நீதிமன்றமாகப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:-
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி. உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்றன. இருந்தாலும், பல்வேறு மொழிகளுக்கு இல்லாத சிறப்பு தமிழுக்கு உண்டு.
இந்திய அரசமைப்புச் சட்டத்திலும், மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதும், மெட்ராஸ் மாநிலம் என்றே தமிழ்நாடு வழங்கப்பட்டது. இதை மாற்றி தமிழ்நாடு என பெயரிடப்பட வேண்டும் என பலரும் போராடி வந்த நிலையில் சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர் நீத்தார். அவருக்கு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்று அண்ணாவின் எண்ணத்தைச் செயலாக்கும் வகையில், சங்கரலிங்கனாருக்கு விருதுநகர் மாவட்டத்தில் மணிமண்டபமும் அதிமுக அரசால் அமைத்து, 2015 ஜூன் 19-இல் திறந்து வைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில்…:
தமிழ்நாடு என மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை பேரவையில் அண்ணா 1967 ஜூலை 18-இல் கொண்டு வந்து நிறைவேற்றினார். அதன்படி, 1968-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திலே சட்டம் இயற்றப்பட்டு, 1969 ஜனவரி 14-ஆம் தேதி முதல் தமிழ்நாடு என வழங்கப் பெறுகிறது.
பிரிட்டிஷ் மகாராணி வழங்கிய சாசனத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட மெட்ராஸ் உயர்நீதிமன்றம் இப்போதும் அந்தப் பெயராலேயே வழங்கப்படுவது பொருத்தமானதாக இல்லை. மெட்ராஸ் மாநகரத்தின் பெயர் 1996-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் சென்னை மாநகரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி, 1997-ஆம் ஆண்டு, மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பது சென்னை உயர்நீதிமன்றம் என மாற்றம் செய்யப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.
இந்த உயர்நீதிமன்றம் சென்னைக்கு மட்டுமல்லாது தமிழ்நாடு முழுமைக்குமான உயர்நீதிமன்றம் ஆகும். மதுரையில் அமைந்துள்ள உயர்நீதிமன்றத்தின் கிளை சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை என்று சொல்வதைவிட தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தின் கிளை என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். பெரும்பாலான உயர் நீதிமன்றங்கள் மாநிலத்தின் பெயராலேயே பெயரிடப்பட்டிருப்பதாலும், சென்னையில் உள்ள உயர்நீதிமன்றம், தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயரிடப்படுவதே சாலப் பொருத்தமாகும்.
எனவே, மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவில் மாற்றங்கள் செய்து, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயரிடப்பட வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மான விவரம்: பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் உயர்நீதிமன்றங்களின் பெயர்களை மாற்றம் செய்வதற்காக, உயர்நீதிமன்றங்கள் பெயர் மாற்ற சட்ட முன்வடிவை மக்களவையில் 2016 ஜூலை 19-இல் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்தச் சட்ட முன் வடிவில் குறிப்பிடப்பட்ட நாளிலிருந்து மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பது சென்னை உயர்நீதிமன்றம் என வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நமது மாநிலம் தமிழ்நாடு என வழங்கப் பெறுகிறது. தற்போது மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என அழைக்கப்படும் உயர்நீதிமன்றம், தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என அழைக்கப்படுவதே சரியானது என்பதால், மக்களவையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட முன்வடிவில் சென்னை உயர்நீதிமன்றம் என்பதற்குப் பதிலாக, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மாற்றம் செய்யப்பட வேண்டுமென மத்திய அரசை இந்த மாமன்றம் கேட்டுக் கொள்கிறது என்றார்.
இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.
அனைத்துக் கட்சிகளும் ஆதரவு: இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் முகமது அபுபக்கர், முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ், மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமூன் அன்சாரி ஆகியோர் ஆதரித்தும், பேரவைத் தலைவர் ப.தனபால், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் வரவேற்றும் பேசினர்.
பின்னர் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில், அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக ப.தனபால் அறிவித்தார்.
பிரதமருக்கு முதல்வர் கடிதம்
சென்னை உயர்நீதிமன்றத்தை, “தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ எனப் பெயர் மாற்றம் செய்வதற்காக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நினைவூட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக விவரம்:
பாம்பே, கல்கத்தா, மெட்ராஸ் உயர் நீதிமன்றங்களின் பெயர்களை மாற்றம் செய்வதற்காக உயர்நீதிமன்றங்கள் பெயர் மாற்ற சட்ட முன்வடிவு 2016 என்ற ஒரு சட்ட முன்வடிவை மக்களவையில் கடந்த
19-இல் (ஜூலை) மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளதாகவும், இந்தச் சட்டமுன்வடிவில் குறிப்பிடப்பட்ட நாளில் இருந்து மெட்ராஸ் உயர்நீதிமன்றம் “சென்னை உயர்நீதிமன்றம்’ என வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உயர் நீதிமன்றமாக…:
தமிழக மக்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்தப் பெயர் மாற்றம் குறித்து தமிழக சட்டப் பேரவையில் விவாதிக்கப்பட்டது. விரிவான விவாதத்துக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவையில் ஒருமித்த தீர்மானம் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்வதற்காக மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட சட்ட முன்வடிவில் தேவையான திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
-http://www.dinamani.com