டெல்லி: காஷ்மீருக்காக இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதப் போரை நடத்தப் போவதாக பாகிஸ்தானில் இருந்து ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் தலைவரான பயங்கரவாதி சையத் சலாஹூதீன் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பாகிஸ்தான் அரசும் அந்நாட்டில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளும் முயற்சித்து வருகின்றனர். இதற்காக பாகிஸ்தான் அரசு கருப்பு தினத்தை கடைபிடித்தது.
இந்த நிலையில் சர்வதேச பயங்கரவாதியான ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் தலைவரான சையத் சலாஹூதீன் இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதப் போர் நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சலாஹூதீன் கூறியுள்ளதாவது: – காஷ்மீருக்காக இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதப் போரை நடத்துவோம். – காஷ்மீரின் தற்போதைய விடுதலைப் போராட்டத்துக்கு தார்மீக ரீதியா, அரசியல் ரீதியாக ஆதரவு தர வேண்டியது பாகிஸ்தானின் கடமை. – அப்படி பாகிஸ்தான் எங்களுக்கு ஆதரவு அளித்தால் இந்தியா- பாகிஸ்தான் இடையே அணு ஆயுத யுத்தத்துக்கு நிச்சயம் வாய்ப்புள்ளது. – இந்தியா- பாகிஸ்தான் இடையேயான 4-வது யுத்தம் என்பது நிச்சயம் காஷ்மீருக்காகத்தான் என கூற முடியும்.
– பாகிஸ்தானோ அல்லது சர்வதேசமோ அல்லது ஐநாவோ ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் தங்களது கடைசி சொட்டு ரத்தத்தையும் சிந்த காஷ்மீரிகள் தீர்மானித்துவிட்டனர். – காஷ்மீரிகளைப் பொறுத்தவரை ஆயுதம் தாங்கிய ஜிஹாத் போராட்டத்தைத் தவிர வேறு ஒரு வாய்ப்பே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். – சர்வதேசம் சமூகம் தொடர்ந்தும் புறக்கணித்து பாகிஸ்தானின் முயற்சிகள் பலனளிக்காமல் இந்தியாவின் ஒடுக்குமுறை தொடர்ந்தால் நிச்சயம் மிகப் பெரிய சம்பவங்கள் நடக்கும். இவ்வாறு சையத் சலாஹூதீன் மிரட்டல் விடுத்துள்ளார்.