மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரத்தை நீக்கக்கோரி கடந்த 16 ஆண்டுளாக உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் இரோம் சானு சர்மிளா போராட்டத்தை கைவிட்டு விடுதலையாகிறார்.
இரும்புப் பெண் என வர்ணிக்கப்படும் 44 வயதான இரோம் சர்மிளா கடந்த 2000–ம் ஆண்டு முதல் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகார சட்டத்தை எதிர்த்து தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்திவருகிறார்.
இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் வாழ வலுக்கட்டாயமாக குழாய் மூலம் திரவ உணவு அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது அந்த அறையே சிறைச்சாலை போல் ஆகிவிட்டது.
இதனிடையே 2 வாரங்களுக்கு முன்பு, தான் உண்ணாவிரதத்தை கைவிட்டு அரசியலில் ஈடுபட்டு ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரத்தை நீக்கக்கோரி போராடப்போவதாகவும், மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் சர்மிளா அறிவித்தார்.
இதுகுறித்து சர்மிளாவின் சகோதரர் இரோம் சிங்காஜித் கூறுகையில், ‘‘சர்மிளா இன்று மணிப்பூர் நகர அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போது அவர் முறைப்படி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறார்.
அதைத்தொடர்ந்து அவரை நீதிமன்றம் விடுதலை செய்யும். அவர் எங்கு செல்வார் என்பது எங்களுக்குத் தெரியாது. சர்மிளாவை வரவேற்க எங்கள் குடும்பத்தினர் தயாராக இருக்கிறோம். எனினும் இதில் அவருடைய விருப்பம்தான் முக்கியம்’’ என்றார்.
மணிப்பூரில் கடந்த 2000-ம் ஆண்டு பொலிஸ் வாகன அணிவகுப்பின்மீது குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
அதில் பலர் அப்பாவி பொதுமக்கள். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மீது வழக்கு தொடுக்க முடியாத வகையில் அவர்களுக்கு, ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் பாதுகாப்பு கவசமாக அமைந்தது.
அந்த சட்டம், சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் சுட்டுக்கொல்வதற்கு பாதுகாப்பு படைக்கு அதிகாரம் தருகிறது. அதை எதிர்த்து முறையிடவும் முடியாது.
இந்த சட்டத்தினை நீக்க வலியுறுத்தி கடந்த 16 ஆண்டுகளாக இரோம் சர்மிளா உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.
அவர் தற்கொலைக்கு முயற்சித்ததாக பல முறை கைது செய்யப்பட்டும், விடுதலை செய்யப்பட்டும், உண்ணாவிரதத்தை மட்டும் முடிவுக்கு கொண்டு வரவில்லை.
இதனால் அங்குள்ள மக்களால் அவர் இரும்புப்பெண்மணியாக கருதப்படுகிறார். தற்போது அவர் அங்குள்ள ஜவகர்லால் நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-http://news.lankasri.com