இந்தியாவில் அதிகமான மக்கள்தொகை கொண்ட உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் ஒரேநாளில் 81 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ஐந்தரை கோடி மரங்களை நட்டு கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் இடம்பிடித்துள்ளது.
அதி மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் 7-ம் திகதி எட்டே மணி நேரத்தில் பத்து லட்சம் மரக்கன்றுகளை நட்டதன் மூலம் கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் இடம்பிடித்திருந்தது அங்குள்ள அரசு.
அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் கடந்த ஜுலை மாதம் 11-ம் திகதி உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு 24 மணிநேரத்துக்குள் ஐந்து கோடி மரக்கன்றுகளை நடும் மாபெரும் சாதனை திட்டத்துக்கு மாநில அரசும் வனத்துறையும் ஏற்பாடு செய்தது.
இதற்காக, சுமார் ஆயிரம் அரசு பண்ணைகளில் வளர்க்கப்பட்ட 80 வகைகளை சேர்ந்த 7 கோடி மரக்கன்றுகள் மாநிலம் முழுவதும் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டது. எந்தெந்த வகை மண்ணில் எவ்வகை செடிகள் விரைவாக வளர்ந்து நல்லப்பலனை தரும் என்பது ஏற்கனவே கண்டறியப்பட்டது.
அதன்படி, அரசுப் பணியாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் துணையுடன் அம்மாநிலத்துக்குட்பட்ட 85 வனக் கோட்டங்களில் சுமார் 81 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ஐந்தரை கோடி மரங்கள் கடந்த மாதம் 11-ம் திகதி நடப்பட்டன.
மரம் நடுவதற்கு முன்னதாகவும், மரம் நடும்போதும், மரங்களை நட்ட பின்னரும் எடுக்கப்பட்ட சுமார் 60 ஆயிரம் புகைப்படங்கள் மற்றும் 18 ஆயிரம் வீடியோ தொகுப்புகள் உலக சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அவற்றை ஆய்வுசெய்த கின்னஸ் நிறுவனத்தார் உத்திரப்பிரதேசம் மாநிலம் ஒரேநாளில் 81 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 24 மணி நேரத்துக்குள் ஐந்தரை கோடி மரங்களை நட்ட இந்த சாதனையை தற்போது உலக சாதனையாக அங்கீகரித்து, சான்றிதழ் அளித்துள்ளது.
-http://news.lankasri.com