கோவை மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தனது பாக்கு மற்றும் தென்னை மர தோட்டத்தில் செயற்கை பறவை கூடுகள் அமைத்து பறவைகளின் புகலிடமாக மாற்றி வருவது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காளிபாளயம் கிராமத்தை சேர்ந்த இளம் விவசாயி அன்புசெல்வன். இவருக்கு சொந்தமாக ஐந்து ஏக்கரில் பாக்கு மற்றும் தென்னை மரங்களை கொண்ட தோட்டம் உள்ளது.
இங்கு ஏராளமான சிறு பறவைகள் கூடு அமைத்து வாழ்ந்து வருவதை கண்ட அன்புச்செல்வன் அந்த பறவைகளுக்கு உதவும் வகையில் மரங்களில் பானைக்கூடுகளை அமைக்க முடிவு செய்தார்.
இதன்படி முதல் கட்டமாக சிட்டுக்குருவி, பச்சைக்கிளி, மைனா போன்ற பறவைகள் தங்கவும், முட்டையிட்டு குஞ்சு பொரிக்க வசதியாகவும் அவற்றுக்கு ஏற்றவாறு துளைகள் இட்ட பானைகளை வாங்கி அவற்றை நூறு பாக்கு மரங்களில் வரிசையாக கட்டியுள்ளார். இதனையடுத்து அங்கு ஏராளமான பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொறித்து வருகின்றனர்.
கூடு அமைத்து கொடுத்தது மட்டுமல்லாமல் தோட்டம் முழுவதும் ஆங்காங்கே தட்டுக்கள் வைத்து பறவைகளுக்கு உணவும் அளித்து வருகிறார் விவசாயி அன்புச்செல்வன்.
சிட்டுக்குருவி, மைனா, கிளிகள் உள்ளிட்ட சிறு பறவைகளின் வாழ்வியல் சூழல் மிக வேகமாய் சுருங்கி வரும் நிலையில் இவரின் இம்முயற்சியால் அங்கு பறவைகள் வாழ ஏற்ற சூழல் உருவாகியுள்ளது.
அதுமட்டுமின்றி இங்கு வந்து தங்கும் பறவைகளின் நலன் கருதி தனது தோட்டத்தில் ரசாயன உரங்களையோ, பூட்சிக்கொல்லி மருந்துகளையோ பயன்படுத்துவதில்லை, இவை இடும் எச்சங்களே தோட்டத்து மரங்களுக்கு மிக சிறந்த இயற்கை உரமாக உள்ளது என்றார் அன்புச்செல்வன்.
-http://news.lankasri.com