காஷ்மீரில் மீண்டும் கலவரம்: 5 பேர் பலி

  • ஜம்மு- காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், முக்கிய சாலையில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்.
  • ஜம்மு- காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், முக்கிய சாலையில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பட்காம், அனந்த்நாக் மாவட்டங்களில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. கலவரக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து, காஷ்மீர் கலவரத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 63-ஆக அதிகரித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் என்னுமிடத்தில் பாதுகாப்புப் படையினருடன் கடந்த மாதம் 8-ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி பர்ஹான் வானி கொல்லப்பட்டார். இதுகுறித்த தகவல் பரவியதும், காஷ்மீரின் பல இடங்களிலும் அதற்கடுத்த நாள் பெரும் கலவரம் வெடித்தது. காஷ்மீரின் பல இடங்களில் அரசு அலுவலகங்கள், ராணுவ முகாம்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, கலவரக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 58 பேர் பலியாகினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், காஷ்மீரின் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது.

இந்நிலையில், பட்காம் மாவட்டம் அரிபந்தான் பகுதியில், வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது ஒரு கும்பல் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அவர்கள் மீது சிஆர்பிஎஃப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில், 4 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.

அனந்த்நாக் மாவட்டம், ஜங்லட் மண்டி பகுதியில் பாதுகாப்புப் படையினர் மீது சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, அவர்களை விரட்டுவதற்காக பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர்.

ஸ்ரீநகரில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், அந்த மாவட்டம் முழுமைக்கும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அனந்த்நாக்கிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பிற பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருந்தது. பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அரசுப் போக்குவரத்து வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. அரசு அலுவலகங்கள் திறந்திருந்தபோதிலும், குறைந்த அளவு ஊழியர்களே வந்திருந்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும் பகுதியிலும் இணையதளச் சேவை துண்டிக்கப்பட்டிருந்தது.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கண்டனம்

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியான சம்பவத்துக்கு அந்த மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.ஏ. மீர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான எம்.ஒய். தாரிகமி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஜி.ஏ. மீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கை, காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியை சீர்குலைத்து விடும்’ எனத் தெரிவித்துள்ளார்.

ஆளுநரிடம் ராணுவ அதிகாரி விளக்கம்

ஸ்ரீநகரில் ஆளுநர் மாளிகையில் அந்த மாநில ஆளுநர் என்.என். வோராவை, ஸ்ரீநகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராணுவப் படைப்பிரிவின் தளபதி எஸ்.கே. துவா செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது அவரிடம், ஜம்மு-காஷ்மீர் மாநில பாதுகாப்பு நிலவரம், ராணுவத்தின் தயார் நிலை ஆகியவை குறித்து விளக்கினார்.

சிஆர்பிஎஃப் படைப்பிரிவு ஐ.ஜி. அதுல் கர்வாலும், ஆளுநர் வோராவைச் சந்தித்து மாநிலத்தின் பாதுகாப்பு நிலவரம் குறித்து விளக்கினார்.

எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு ஒமர் கட்சி அழைப்பு

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கையில் பொது மக்கள் பலியாகும் சம்பவம், தொடரும் வன்முறை ஆகியவை குறித்து விவாதிப்பதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை தேசிய மாநாட்டுக் கட்சியின் (என்.சி.) செயல் தலைவர் ஒமர் அப்துல்லா புதன்கிழமை (ஆக.17) கூட்டியுள்ளார். மேலும், காஷ்மீர் விவகாரத்தில் தலையிடக் கோரி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் விரைவில் மனு அளிக்கவும் தேசிய மாநாட்டுக் கட்சி திட்டமிட்டுள்ளது.

பிரிவினைவாத அமைப்பு பேரணி

காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. சபை தலையிடக்கோரி அந்தச் சபையின் ராணுவ கண்காணிப்புக் குழு அலுவலகத்தை நோக்கி புதன்கிழமை பேரணி நடத்தவும் பிரிவினைவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. இந்தத் தகவலை ஹுரியத் அமைப்புத் தலைவர் மீர்வாய்ஸ் உமர் ஃபாரூக் தெரிவித்துள்ளார்.

பிரிவினைவாத அமைப்புகளின் இந்த அறிவிப்பால் காஷ்மீரில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்புப் பலப்படுத்தப் பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங் ஆய்வு

 

ஜம்மு-காஷ்மீர் நிலவரம் தொடர்பாக தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயரதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினார். இதில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், மத்திய உள்துறைச் செயலர் ராஜீவ் மெஹ்ரிஷி, உளவு அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் விளக்கமளித்தனர்.

காஷ்மீரில் முடிந்த அளவு விரைவாக அமைதியைத் திரும்பச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், பொதுமக்கள் – பாதுகாப்புப் படையினர் உயிரிழப்புகளைத் தவிர்க்கும்படியும் அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார்.

-http://www.dinamani.com

TAGS: