32 தமிழர்கள் குற்றம் செய்யவில்லை என்றால் நிரூபிக்கட்டும்.. ஆந்திர அமைச்சர் திமிர் பேட்டி

gopalakrishnareddyதிருப்பதி: செம்மரக்கடத்தலில் ஈடுபடவில்லை என்றால் அதனை நிரூபித்து 32 தமிழர்களும் விடுதலையாகட்டும் என்று ஆந்திர வனத் துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணரெட்டி தெரிவித்துள்ளார்.

கடந்த 4ம் தேதி ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி 32 தமிழர்களை ஆந்திர போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது ஜாமீனில் வர முடியாத 6 சட்டப் பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்கள் திருப்பதி 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி விஜயா, செம்மரக்கடத்தலை தடுக்க ஆந்திர வன சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்தின்படி 32 பேருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து மீண்டும் 32 தமிழர்கள் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தப் பிரச்சனை தொடர்பாக ஆந்திர மாநில வனத்துறை அமைச்சர் கோபால கிருஷ்ணாரெட்டி, 32 தமிழர்களும் தவறு செய்யவில்லை என்றால் அதனை நிரூபித்து விடுதலையாகட்டும் என்று பேசியுள்ளார். செம்மரக் கடத்தல்காரர்களை கதாநாயகர்களாக ஆக்காத்தீர்கள் என்றும், செம்மரத்தை வெட்டுபவரோ, கடத்துபவரோ கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

tamil.oneindia.com

TAGS: