உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 1012 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி வரை 1012 பாலியல் பலாத்கார வழக்குகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4520 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, ஒட்டுமொத்த மாநிலத்தில் 1386 திருட்டு வழக்குகளும், 86 வழிப்பறி தொடர்பான வழக்குகளும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் நடக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் நடந்தேறும் குற்றங்களை கட்டுபாடுத்தும் நோக்கில் குற்றவியல் பிரிவு சிறப்பு பொலிசாரை ஒவ்வொரு மாவட்டத்திலும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தின் போது, பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் அம்மாநில அரசு இவ்வாறு பதிலளித்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி அரசு ஆட்சியில் இருந்து வருகிறது. அடுத்த ஆண்டு இங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து நடந்தேறும் பாலியல் பலாத்கார சம்பவங்களில் சாதி ரீதியான பிரச்னைகளும் இருப்பதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் வீடியோ பதிவுகளை கடைகளில் விற்பனைக்கு விட்டிருந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.
-http://news.lankasri.com