ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 47 நாட்களாக வன்முறை தொடருகிறது. இதுவரை 67 பேர் பலியாகி உள்ள நிலையில் நேற்றும் வன்முறை நீடித்தது. அம்மாநிலத்தில் தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு நாசமாகி மிகப் பெரும் பொருளாதார முடக்கத்துக்குள்ளாகி சிக்கித் தவிக்கின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் ஜூலை 8-ந் தேதியன்று ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க தீவிரவாதி புர்ஹான் வானி மோதல் ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு ராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையேயான மோதல் வெடித்தது. வன்முறையில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த கண்ணீர்புகை குண்டுகள், தண்ணீர் பீய்ச்சி அடித்தல் ஆகிய முறைகளைக் கைவிட்டுவிட்டு கொத்து கொத்தாக உடல்களில் குடியேறிக் கொள்ளும் “பெல்லட்” குண்டுகளை வீசுவதை ராணுவம் கடைபிடித்து வருகிறது. இத்தகைய பெல்லட் குண்டுவீச்சு மிகப் பெரிய அளவில் பொதுமக்களை பாதிப்படைய செய்துள்ளது. ஏராளமானோர் கண்பார்வையை பறிகொடுத்திருக்கின்றனர்.
கடந்த ஒன்றரை மாதமாக நீடித்து வரும் ராணுவத்துடனான மக்களின் மோதல்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் ராணுவ தளபதியும் உள்துறை அமைச்சரும் மீண்டும் மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு சென்று நிலைமைகளை நேரில் ஆராய்ந்து வருகின்றனர். ஆனாலும் நிலைமை கட்டுப்படுத்தப்படவில்லை. 46-வது நாளாக நேற்றும் ஜம்மு காஷ்மீரில் வன்முறை வெடித்தது. நேற்றைய மோதலில் 19 பேர் படுகாயமடைந்தனர். அத்துடன் பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது எல்லைப் பாதுகாப்புப் படையினரும் ஜம்மு காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லைப் பாதுகாப்புப் படையினர் பள்ளிக்கூடங்களை ஆக்கிரமித்து முகாமிட்டுள்ளனர்.
ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் இருந்தும் நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் சில மணிநேரங்கள் மட்டுமே ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஒன்றரை மாதமாக அம்மாநிலத்தில் அடியோடு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜம்மு காஷ்மீர் வர்த்தகர் சங்கத் தலைவர் யாசின் கான், நாளொன்றுக்கு ரூ135 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 45 நாட்களில் ரூ6,000 கோடி இழப்பை சந்தித்திருக்கிறோம். மிக மோசமான பொருளாதார இழப்பை எதிர்கொண்டு வருகிறோம். இந்த நிலைமை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எங்களுக்கு இது மிகப் பெரிய துயரமாகும்.
இதற்கு நிரந்தரமான அரசியல் தீர்வு மட்டுமே வழியாக இருக்க முடியும் என்கிறார். ஜம்மு காஷ்மீர்ல் விவசாயம் தொடங்கி சுற்றுலா வரை அனைத்து துறைகளுமே முடங்கிப் போய்விட்டன. ஹோட்டல்கள், படகு வீடுகள் அனைத்துமே பல வாரங்களாக வெறிச்சோடி கிடக்கின்றன. காஷ்மீரில் இருந்துதான் நாடு முழுவதுக்குமான 70% ஆப்பிள்கள் கிடைக்கிறது.
ஆனால் எல்லாமும் சர்வநாசமாகி தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டோம் என கதறுகின்றனர் விவசாயிகள். கடந்த 2014-ம் ஆண்டு மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டு ஜம்மு காஷ்மீரை சீர்குலைத்துப் போட்டது. 2015-ம் ஆண்டு நிலைமை ஓரளவு சீரடைந்தது. இப்போது 47 நாட்களாக நீடிக்கும் வன்முறையால் மீண்டும் எல்லாமும் நாசமடைந்துவிட்டது என்பதுதான் ஜம்மு காஷ்மீர் மக்களின் பெருந்துயர குரலாக இருக்கிறது.