வாடகைத் தாய் முறை வாயிலாக சட்ட விதிகளுக்குப் புறம்பாக குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இந்தியாவில் குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள், வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள சட்ட அனுமதி உண்டு. அதைத் தவறாகப் பயன்படுத்தும் சிலர், அந்த நடைமுறையை வர்த்தகமயமாக்கி வருகின்றனர்.
மேலும், கிராமப்புறப் பெண்கள் மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கு பண ஆசை காட்டியும், மூளைச் சலவை செய்தும் வாடகைத் தாயாக செயல்பட அனுமதிக்க வைக்கப்படுவதாகத் தெரிகிறது. இதைத் தவிர, வெளிநாடுகளில் இருந்தும் பலர் இந்தியப் பெண்களை வாடகைத் தாய் முறைக்கு உட்படுத்தி குழந்தை பெறுகின்றனர்.
இத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் புதிய மசோதா ஒன்றைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கான வரைவு விதிகளை வகுக்க மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன், ஹர்சிம்ரத் கெளர் பாதல் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த வரைவு மசோதா மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு அண்மையில் அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இதையடுத்து, எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய அம்சங்கள்
* வெளிநாட்டுத் தம்பதியினர் இந்தியப் பெண்களை வாடகைத்
தாயாகப் பயன்படுத்தத் தடை விதிக்கும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
* வாடகைத் தாய் முறையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவது மற்றும் அதில் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு சட்ட உரிமைகள் வழங்குவது தொடர்பான ஷரத்துக்களும் இடம்பெற்றுள்ளன.
* திருமணமாகாமல் சேர்ந்து வாழ்பவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், வாழ்க்கைத் துணையைப் பிரிந்து வாழ்பவர்கள் ஆகியோர் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற அனுமதி இல்லை.
* சட்டவிரோதமாகவோ, வர்த்தக நோக்கிலோ குழந்தை பெற்றால், அதில் தொடர்புடையவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
-http://www.dinamani.com