எவரெஸ்டில் ஏறியதாக பொய் கூறிய இந்திய தம்பதிக்கு நேபாள அரசு தடை

everestஉலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்ததாக காட்டும் வகையில், போலி புகைப்படங்களை வெளியிட்டு ஏமாற்றிய, இந்திய தம்பதிக்கு, நேபாளத்தில் உள்ள மலைகளில் ஏறுவதற்கு, அந்த நாட்டு அரசு, 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த தினேஷ் மற்றும் தாரகேஸ்வரி ரதோட் ஆகிய இருவரும், காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். தம்பதியரான இவர்கள், மே 23ல், அண்டை நாடான நேபாளத்தில், உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் ஏறி, சாதனை படைத்ததாக கூறி, அதை நிரூபிக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டனர்.

ஆனால், ‘அவை, திருத்தப்பட்ட போலி புகைப்படங்கள்’ என, சக மலையேற்ற வீரர்கள் சந்தேகம் எழுப்பினர்; இருப்பினும், பொலிஸ் தம்பதி, எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்ததாக, நேபாள சுற்றுலாத் துறை சான்றிதழ் அளித்தது.

அதேசமயம், சக வீரர்கள் எழுப்பிய சந்தேகம் தொடர்பாக, நேபாள அரசு விசாரணையும் மேற்கொண்டது. தற்போது அந்த விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த பொலிஸ் தம்பதி அளித்த புகைப்படங்கள் போலியானவை என தெரியவந்தது. இதையடுத்து, நேபாளத்தில் உள்ள மலைகளில் ஏறுவதற்கு, இந்த தம்பதிக்கு, 10 ஆண்டுகள் தடையை, நேபாள அரசு விதித்துள்ளது.

இதனிடையே இந்த ஆண்டு மட்டும் மார்ச் முதல் மே மாதம் முடிய 454 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் பனிப்பொழிவு காரணமாக வீரர்கள் எவரும் மலை ஏறுவதை நேபாள அரசு தடை செய்திருந்தது.

மட்டுமின்றி காலநிலை மாறுதல் குறித்த போதிய தகவல்கள் சேகரிக்காமல் சென்ற பல குழுக்களும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மட்டுமின்றி கடந்த ஆண்டு ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமும் மலை ஏறுவதற்கு தடை விதிக்க காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com

TAGS: