நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழந்தார் – பிரித்தானிய இணையம்

Netaji_Subhas_Chandra_Boseசுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், கடந்த 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி தைவானில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தார் என பிரித்தானிய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஜப்பான் அரசு வெளியிட்டுள்ள 60 ஆண்டுகள் பழைமையான ரகசிய ஆவணத்தில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இறப்பில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருவதால், அதுதொடர்பாக வெளியாகும் அனைத்துத் தகவல்களையும் ஆதாரமாக சேமித்து வைக்கும் நோக்கில் பிரித்தானியாவில் ஆஷிஸ் ரே என்பவர் ஓர் இணையதளத்தை உருவாக்கினார்.

அந்த இணையதளத்தில், சுபாஷ் சந்திரபோஸ் இறப்பு தொடர்பாக கிடைக்கும் அனைத்துத் தகவல்களும் பதிவு செய்து வைக்கப்படும். குறித்த இணையதளத்தில் நேதாஜி தொடர்பாக இன்று வெளியான தகவல் இவ்வாறு அமைந்துள்ளது.

“மறைந்த சுபாஷ் சந்திரபோஸ் இறப்பு தொடர்பான விசாரணை அறிக்கை’ என்ற தலைப்பில் ஜப்பான் அரசு 7 பக்க ரகசிய ஆவணத்தை வெளியிட்டுள்ளது.

அதில் “கடந்த 1945ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி தைவான் அருகே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான விபத்து நேர்ந்தது. உடனே தீப்பிடிக்கவும் செய்தது.

அப்போது, அந்த விமானத்தில் பயணித்த சுபாஷ் சந்திரபோஸ் தீக்காயங்களுடன் விமானத்திலிருந்து கீழே விழுந்தார். அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் தைவான் தலைநகர் தைபேயில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நேதாஜி அனுமதிக்கப்பட்டார்.

பிறகு, இரவு 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் தைபே நகரில் உள்ள இடுகாட்டில் ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி தகனம் செய்யப்பட்டது. நேதாஜி இறந்தபோது அவருக்கு வயது 48.

விமான விபத்து ஏற்பட்டபோது, நேதாஜியுடன் அவரின் நம்பிக்கைக்குரிய நபரான ஹபிபுர் ரஹ்மான் உடனிருந்தார். அதன்பிறகு, ஜப்பான் அரசு மேற்கொண்ட விசாரணையில் இந்தத் தகவல்கள் தெரியவந்தன.

இதுதொடர்பாக விசாரணை அறிக்கையும், இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது என அந்த ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: