பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட உத்தரவிட்ட உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கர்நாடகாவில் வரும் 9-ந் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்தன. பாஜக, மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இந்த உத்தரவை எதிர்த்துள்ளன.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தி மாண்டியா, மைசூரு, சாமராஜ்பேட்டை, உப்பள்ளி உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட முயன்ற 50-க்கும் மேற்பட்டோர் செய்யப்பட்டனர்.
பெரும்பாலான இடங்களில் விவசாயிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மாண்டியாவில் காவிரி நலன் பாதுகாப்புக்குழு கூட்டம் முன்னாள் எம்பி ஜி.மாதே கவுடா தலைமையில் நடந்தது. இதில் இன்று மாண்டியா மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
பெங்களூரில் கன்னட சலுவளி கட்சித்தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கூடிய கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பினர், செப்.9-ந் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
பெங்களூரில் உள்ள ரிச்மண்ட் சாலையில் கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். டவுன்ஹாலில் கர்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பினர் அதன் தலைவர் டி.ஏ.நாராயணகெளடா தலைமையில் தீப்பந்த ஊர்வலம் நடத்தி, உச்சநீதிமன்றத்தீர்ப்பின்படி தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினர்.