தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது! கர்நாடகாவில் பதற்றம்

உச்சநீதிமன்ற உத்தரவின்படி கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இரண்டாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்திற்கு காவிரியில் 10 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவு தொடர்பாக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீற முடியாது, எனவே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே 33 டிஎம்சி தண்ணீர் திறந்து விட்டுள்ள நிலையில், கனத்த இதயத்துடன் தண்ணீர் திறந்து விடுகிறோம்.

கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடாமல் அமைதி காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

உச்ச நீதிமன்றத்தை அணுகி கர்நாடகத்தின் நிலைமையை விளக்கி, சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.

மேலும் காவிரி மேற்பார்வை குழுவை அணுகி மாநிலத்தின் நிலையை விளக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து நள்ளிரவில் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி தண்ணீரும் நள்ளிரவு 12 மணியளவில் திறந்துவிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணராஜசாகர் அணை அருகே தீப்பந்தகளுடன் போராட்டம் நடத்தியவர்களை பொலிசார் கைது செய்தனர், தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் இரு அணைகளிலும் துணை ராணுவப் படையினர் மற்றும் பொலிசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக கர்நாடகாவில் போராட்டம் நடந்து வருவதால் பதற்றம் நீடிக்கிறது.

-http://news.lankasri.com

TAGS: