பாட்னா: பீகார் மாநிலத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத கிராமத்தில் இருந்து பெண் எடுக்க யாருமே முன் வராத காரணத்தால் அங்கு 20 ஆண்டுகளாக திருமணமே நடக்கவில்லை என கூறுவது அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது.
பீகார் மாநிலம் பஹகல்பூரில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது சன்ஹவுளி என்ற கிராமம். சுமார் 6,000 மக்கள் வசிக்கும் அந்த கிராமத்துக்கு செல்ல முறையான சாலை வசதியோ வேறு எந்த அடிப்படை போக்குவரத்து வசதியோ இல்லை. இதன் காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது திருமண நாட்களை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
சாந்தன் ஆற்றுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த கிராமத்தை சென்றடைய மிகவும் அபாயகரமான பாலத்தை பயன்படுத்தி ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. மோசமான நிலையில் இருக்கும் பாலத்தை கடந்துச் சென்று பெண் எடுக்க யாரும் விரும்பவில்லை என கூறப்படுகிறது.
இந்த பாலமும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கட்டியதாக கூறப்படுகிறது. வெளி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பாலத்தை கடந்து வர மிகவும் அச்சப்படுவதால் கிராமத்தில் உள்ள பெண்கள் திருமணமே ஆகாமல் காத்திருக்கின்றனர். வேறு எந்த கிராமத்துடனும் இந்த கிராமம் இணையாததால் போக்குவரத்து மிகப் பெரிய அவசியமாக உள்ளது.