கர்நாடகா பந்த்… மைசூர், மாண்டியா மட்டுமல்ல பெங்களூருவையும் முடக்கும் கன்னட அமைப்புகள்

cauvery-protestபெங்களூர்: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டதைக் கண்டித்து நாளை மறுநாள் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றியடைய செய்வதில் கன்னட அமைப்புகள் மும்முரமாக உள்ளன. தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக நாளை மறுநாள் கர்நாடகா தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.

உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மைசூரு, மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டினாவில் போராட்டங்கள் தொடர்கின்றன. எல்லைப் பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசு காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட்டுள்ளது. இது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கன்னட அமைப்புகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே நாளை மறுநாள் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிப் பெறச் செய்வதில் கன்னட அமைப்பினர் மும்முரமாக உள்ளனர். ஏற்கனவே மைசூரு, மாண்டியா பகுதிகளில் இயல்பு நிலை கடந்த 3 நாட்களாக முடங்கிவிட்டது. பள்ளி, கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையே போர்க்களமாக இருக்கிறது.

தற்போது பெங்களூரு நகரையும் முழுமையாக முடக்குவதில் முனைப்பு காட்டுகின்றன கன்னட அமைப்புகள். குறிப்பாக நாளை மறுநாள் பந்த நடைபெறும் போது பெங்களூருவில் அனைத்து கடைகள், கல்வி நிறுவனங்களை மூட கன்னட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் மைசூர், மாண்டியா மட்டுமின்றி பெங்களூருவும் கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது. அதே நேரத்தில் வட கர்நாடகாவில் அவ்வளவாக பாதிப்பு இருக்காது என்றும் கூறப்படுகிறது.

எல்லைகளில் தமிழக பதிவு எண் கொண்ட அனைத்து வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கர்நாடகா அரசு பேருந்துகள், தமிழகத்துக்கு இயக்கப்பட்டு வருகின்றன. நாளை மறுநாள் முழு அடைப்பின் போது எல்லைகளை மூடி எந்த ஒருவாகனத்தையும் அனுமதிக்கக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளன கன்னட அமைப்புகள்.

tamil.oneindia.com

TAGS: