தமிழர்களை உறைய வைக்கும் ‘பந்த்’ கர்நாடகாவில் திரும்புகிறதா 1991?

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது.

பாஜக, மஜத உட்பட நூற்றுக்கணக்கான கன்னட அமைப்புகள், விவசாய அமைப்புகள் பங்கேற்றுள்ளதால் கர்நாடகாவில் பதற்றம் நிலவுகிறது. மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள் கர்நாடகா வாழ் தமிழர்கள். பந்த்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையென்றால் வீடு புகுந்து தாக்குவோம் என்ற அடாவடி அறிவிப்பு அவர்களை மிரட்சிக்குள்ளாக்கியுள்ளது.

700க்கும் மேற்பட்ட அமைப்புகளின் ஆதரவோடு கர்நாடகாவில் இன்று பந்த் நடைபெற்றுவருகிறது, கர்நாடக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மைசூரு, மண்டியா, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் பந்த் தீவிரமாகவே இருக்கிறது. தலைநகர் பெங்களூரில் மட்டும் பாதுகாப்புக்காக 16 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்ற செய்தி பந்த் போராட்டத்தின் தீவிரத்தை எடுத்து சொல்கிறது.

ஐ.டி நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை

கடைகள் மூடப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள் இயங்கவில்லை. வாகனங்கள் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் உச்சமாக பந்த் கடைபிடிக்காமல் இயங்கிய ஐடி நிறுவனங்களை முற்றுகையிட்ட கன்னட அமைப்பினர் நிறுவனங்களை உடனடியாக மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

எந்த போராட்டத்திலும் பங்கேற்காமல், அலட்டிக்கொள்ளாமல் இருக்கும் ஐடி நிறுவனங்களை கூட பரபரக்க வைத்தது இந்த பந்த் போராட்டம்.

அதுமட்டுமல்லாது பெங்களூர் சர்வதேச விமான நிலையம் முன்பு கன்னட ரக்சன வேதிகேயின் பெண்கள் அமைப்பினர் முற்றுடையில் ஈடுபட்டதால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்கள்.

தண்ணீர் திறந்துவிடப்பட்ட நாள் முதல் இன்று வரை போராட்டம் தீவிரமடைந்து வருகிறது மைசூரு – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

தமிழக – கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் குல்பர்கா, பிஜாபூர், மண்டியா, மைசூரு பகுதியில் தாக்குதலுக்குள்ளாகின.

மைசூரு – சத்தியமங்கலம், பெங்களூரு – ஓசூர் இடையே தமிழக அரசு பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. “கர்நாடகம் நம்தே, காவேரி நம்தே” ‘ஜெயலலிதா டிக்காரா… ஜெயலலிதா டிக்காரா’ என கோஷங்களுடன் மெஜஸ்டிக் ரயில் நிலையம் முன்பு ரயில் மறியலில் ஈடுபட முயன்ற கன்னட ரக்சன வேதிகே அமைப்பினரை பொலிஸார் கைது செய்தனர்.

அவர்கள் ஆத்திரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமையா, நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலின் உருவ பொம்மைகளை எரித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மிரட்டப்பட்டும் தமிழர்கள்

“கர்நாடக பந்த்துக்கு அங்கு வாழும் தமிழர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லையெனில் 1991ஆம் ஆண்டு நடந்தது போல் மீண்டும் ஒரு கலவரம் நடக்கும்.

தமிழர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடத்துவோம்” என கன்னட ரக்சன வேதிகே அமைப்பைச் சேர்ந்த தர்மேந்திரா ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி தர… அது கர்நாடக வாழ் தமிழர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட சவுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜன், ‘‘எங்களுடைய போராட்டத்திற்கு கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் கலந்து கொள்ளவில்லை என்றால் மூட்டையை கட்டிக் கொண்டு தமிழ்நாட்டிற்கு ஓடு’’ எனக்கூறி பதற்றத்தை அதிகரிக்கச் செய்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக வாட்ஸ் அப், சமூக வலைதளங்களில் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவது அதிகரித்துள்ளது.

இன்று நடைபெற்று வரும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பெங்களூர் தமிழ்ச் சங்கம், கர்நாடக தமிழ் கூட்டமைப்பு, அனைத்து இந்திய தமிழ் சங்க கூட்டமைப்பு ஆகியன ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன.

தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 54 தமிழ் சேனல்களின் சேவை முடக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ் திரைப்படங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

பதற்றத்தின் உச்சத்தில் தமிழர் வாழ் பகுதிகள்

இதற்கிடையில் கர்நாடக கொப்பல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் தமிழர் ராமச்சந்திரன் பள்ளிக் குழந்தைகள் போராட்டத்தில் கலந்துக் கொள்ள கூடாது என்று ஒரு சுற்றறிக்கை அனுப்பியதால் அவரது வீட்டின் முன்பு 500க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்துள்ளார்கள்.

பெல்லாரியில் தமிழில் நம்பர் பிளேட் போட்டிருந்த 3 லாரிகளை தீ வைத்து கொளுத்தி இருக்கிறார்கள்.

பெங்களூரில் உள்ள கோரமங்கலா, சர்ஜாபூர், பன்னர்கடா, வொயிட் பீல்ட் போன்ற பகுதிகளில் உள்ள ஐ.டி., நிறுவனங்களில் அதிகம் தமிழர்கள் வேலை பார்ப்பதால் நேரடியாக கன்னட அமைப்புகள் சென்று ஐ.டி., நிறுவங்களுக்கு விடுமுறை விட வில்லை என்றால் தொலைத்து விடுவோம் என்று எச்சரிக்கை செய்தும் இருக்கிறார்கள்.

இதனால் கர்நாடக முழுவதும் பெரும் பதற்றம் சூழ்ந்துள்ளது. தமிழர்கள் வாழக்கூடிய ஓக்லிபுரம், ஸ்ரீராமபுரம், இராமச்சந்திரா நகர், பிரகாஷ்நகர், மாங்கடி ரோடு, சிவாஜி நகர், சாந்தி நகர், அல்சூர், இராமமூர்த்தி நகர், கோரமங்கலா, வண்ணாரப்பேட்டை பெரியார் நகர், இராஜாஜி நகர் பகுதிகளிலும், கர்நாடகவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தமிழ் சங்கங்கள், திருவள்ளுவர் சிலை போன்ற அனைத்து பகுதிகளிலும் மாநில ஆயுதப்படை பொலிஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தமிழர்கள் வாழும் பகுதியில் பொலிஸ் குவிப்பு

3 நாட்களாக போராடிய கன்னட அமைப்புகள் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தின் போது தமிழர் குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று தமிழர்களை உடைமைகளை சேதப்படுத்துவதோடு அவர்களை அடித்து துரத்தவும் முடிவு செய்திருந்ததாக கூறப்பட்டது.

இது உளவுத் துறை மூலமாக மாநில அரசுக்கு தெரிய வர உடனே கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா நேற்று இரவு அனைத்து கன்னட அமைப்பின் தலைவர்களையும் அழைத்து, ‘‘நாம் போராடுவது நம்முடைய உரிமை.

அதில் யாரும் தலையிட வில்லை. ஆனால் சிறுபான்மை சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தினீர்கள் என்றால் அது தேசிய பிரச்னையாக மாறக்கூடும். நமக்கு பாதகமாகவே அமைந்து விடும்.

தவறான திட்டம் ஏதாவது வகுத்து வைத்திருந்தாலும் அதை கைவிட்டு நேர்மையான வழியில் போராடுங்கள்… போராடுவோம்.

ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்” என்று வலியுறுத்தியதை அடுத்து தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டை சேர்ந்த பெங்களூர் துணை கமிஷனர் ஹரிசேகரன் தமிழர்கள் பாதுக்காக்கப்பட்டதற்கு முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுத படை பொலிஸாரை தமிழர் பகுதிகளில் குவித்திருக்கிறார்கள்.

திரும்புகிறதா 1991?

1991ல் இதே போன்று உச்சநீதிமன்ற தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட இடைக்கால தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. ஆனால் அப்போது கர்நாடகாவின் முதல்வராக இருந்த பங்காரப்பா, ‘‘நான் ஜெயிலுக்கு போனாலும் போவேன்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மாட்டேன்’’ என்று கூறி தண்ணீர் திறந்து விட மறுத்து விட்டார். அதனால் தமிழகத்திலும், கர்நாடகாவிலும் போராட்டம் வெடித்தது.

இதில் கர்நாடகாவில் உள்ள தமிழர்களை வீடு புகுந்து கன்னடர்கள் தாக்கி சூரையாடினார்கள். இதனால் தமிழர்களுடைய பல கோடி மதிப்பிலான உடமைகள் சூரையாடப்பட்டது.

லட்சகணக்கான தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு திரும்பி வந்தார்கள். சில உயிர் பலிகளும் நேர்ந்தது. இதை சுட்டிக் காட்டியே கர்நாடக தமிழர்களை சிலர் அச்சுறுத்தி வருகிறார்கள்.

காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்கவில்லை. தமிழகத்துக்கான உரிமையில் ஒரு பகுதியைக்கூட, இப்படி போராடி மட்டுமே பெற வேண்டியுள்ளது. அதற்கு கூட எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகா வாழ் தமிழர்கள் அச்சுறுத்தப்படுவதும், மிரட்டப்படுவதும் தான் கொடுமை.

– Vikatan

TAGS: