கர்நாடகத்தை கண்டித்து தமிழகம், புதுவையில் முழு அடைப்பு- இயல்பு வாழ்க்கை முடக்கம்!

bandhசென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் இரு மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம்- புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் காலை 6 மணிக்கு தொடங்கியது. இப்போராட்டம் மாலை 6 மணிவரை நடைபெறும்.

முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன. வர்த்தகர்கள் கடை அடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

கடை அடைப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பில் அங்கம் வகிக்கும் சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை 21 லட்சம் கடைகள் அடைக்கப்படும் என்று அதன் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைக்குட்பட்ட 6 ஆயிரம் சங்கங்களில் இருந்து 65 லட்சம் வணிகர்கள் இந்த கடை அடைப்பு போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று அதன் தலைவர் த.வெள்ளையன் அறிவித்துள்ளார்.

லாரிகள், வாகனங்கள்

தமிழகம் முழுவதும் 4.5 லட்சம் லாரிகளும், 4.5 லட்சம் மினிவேன்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் அனைத்து வாகனங்களும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஓடாது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகள் ஓடாது என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஆம்னி பேருந்துகள் ஆம்னி பஸ்களும் பகலில் இயக்கப்படாது என்று அறிவித்து உள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் 4 ஆயிரத்து 800 பெட்ரோல்- டீசல் நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆட்டோ-டாக்சி ஓட்டுனர்கள் சங்கம் முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பள்ளிகள் மூடல் ஆட்டோக்கள், தனியார் வேன்கள் போராட்டத்தில் பங்கேற்பதால் தனியார் பள்ளிகள் செயல்படாது என்று தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்து உள்ளது.

ஆனால் அரசு பள்ளிகள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

படப்பிடிப்பு ரத்து

இன்று சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்திரைப்பட துறையினர் அறிவித்து இருக்கிறார்கள். பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நகைக் கடைகள் மூடல்

கடையடைப்பு போராட்டத்தில் தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் பங்கேற்காது என்று சங்க தலைவர் வெங்கட சுப்பு கூறியிருக்கிறார். நகைக்கடைகள் மூடப்படும் என்று அச்சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பு சென்னையில் 20 ஆயிரம் போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த முழு அடைப்புப் போராட்டத்தால் இரு மாநிலங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
tamil.oneindia.com

TAGS: