நாம் தமிழர் கட்சியின் தொண்டர் விக்னேஷின் உடல் இன்று நல்லடக்கம்

திருவாரூர் காவிரி பிரச்னைக்காக தீக்குளித்து உயிரிழந்த நாம் தமிழர் கட்சி தொண்டர் விக்னேஷின் உடல் இன்று (17) மன்னார் குடியில் அடக்கம் செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த வியாழக்கிழமை நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி நடைபெற்றது.

அதில் சீமான், அமீர், சேரன் உள்ளிட்ட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியின்போது பா. விக்னேஷ் திடீரென தன் மீது நெருப்பு வைத்துக் கொண்டார்.

தீயில் கருகிய அவரை அங்கிருந்தோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

காவிரி விவகாரத்தில் உரிய தீர்வு காண வலியுறுத்தியும், கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் சென்னை எழும்பூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியில் மன்னார்குடியைச் சேர்ந்த விக்னேஷ் தீக்குளித்தார்.

கீழ்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து விக்னேஷின் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் மருத்துவமனையில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் விக்னேஷின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கு பொலிஸார் அனுமதி மறுத்ததால் நாம் தமிழர் கட்சியினர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சுமார் இரண்டு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், விக்னேஷ் உடல் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகமான வளசரவாக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் மன்னார்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது அங்கு தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: