காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலில் 17 ராணுவத்தினர் பலி.. 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

kashஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி பகுதியில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நான்கு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டாலும் கூட அவர்களால் நமது தரப்பில் 17 ராணுவத்தினர் பலியாகியுள்ளது பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் சமீப காலத்தில் நடத்திய மிகப் பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இந்த அளவுக்கு மிகப் பெரியஉயிர்ப் பலியை தீவிரவாதிகள் சமீபகாலத்தில் முதல் முறையாக இன்று ஏற்படுத்தி விட்டது இந்தியாவை அதிர வைத்துள்ளது.

எல்லைக் கோட்டுப் பகுதிக்கு அருகில் உள்ள ராணுவத் தலைமையகம்தான் தாக்குதலுக்குள்ளானது. அங்கு 3 முதல் 4 தீவிரவாதிகள் புகுந்திருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து அங்கு ராணுவத்தினர் தீவிர துப்பாக்கிச் சண்டையில் இறங்கினர். இரு தரப்புக்கும் இடையே அதிரடி சண்டை நடந்தது. தீவிரவாதிகள் கையெறி குண்டுகளையும் வீசித் தாக்கினர்.

இதில் ராணுவத் தரப்பில் பலர் காயமடைந்தனர். காயமடைந்த பாதுகாப்புப் படையினர் அங்கிருந்து ஹெலிகாப்டர்கள் மூலமாக ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுகிறது. நீண்ட நேரம் நீடித்த சண்டையின் இறுதியில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையி்ல்தான் தாக்குதலில் 17 ராணுவத்தினர் கொல்லப்பட்ட விவரம் வெளியாகியுள்ளது. இது பாதுகாப்புப் படையினரை அதிர வைத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்று தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

தாக்குதலில் சிக்கிய ராணுவ தலைமையகமானது பாரமுல்லா மாவட்டத்தில், ஸ்ரீநகர் – முசாபரபாத் நெடுஞ்சாலையில் உள்ளது. அதிகாலை 4 மணிக்கு தீவிரவாதிகள் புகுந்து தாக்கினர். தாக்குதல் குறித்து டிவிட்டரில் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ளது.

இதனால் எனது ரஷ்ய மற்றும் அமெரிக்க பயணங்களைத் தள்ளிவைத்துள்ளேன் என்று கூறியிருந்தார். மேலும் அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர், முதல்வருடன் பேசினேன். காஷ்மீர் நிலைமை குறித்து என்னிடம் அவர்கள் விளக்கினர் என்று கூறியிருந்தார் ராஜ்நாத் சிங்

tamil.oneindia.com

TAGS: