தொடரும் தீக்குளிப்பு மரணங்களுக்கு விக்னேஷின் உயிர்த்தியாகம் முற்றுப்புள்ளியாகட்டும்!

vikkகாவிரி உரிமை மீட்பு பேரணியின் போது நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பா.விக்னேஷ் தீக்குளித்த செய்தி மனவேதனையை ஏற்படுத்தியிருந்த நிலையில் மறுநாள் அவர் இறந்துவிட்டார் எனும் தகவல் மீளாத்துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கான காவிரி நதி நீர் உரிமையினை மறுத்துவரும் கர்நாடக அரசின் கடும்போக்கை கண்டித்தும் கர்நாடக வாழ் தமிழர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னையில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு பேரணியில் பா.விக்னேஷ் தமிழக வாழ்வுரிமைப் பிரச்சினைகளுக்காக மாணவர்கள் போராட முன்வர வேண்டுமென்ற அறைகூவலாக தனது உடலில் தீயினை மூட்டியிருந்தார்.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் இன அழிப்பிற்கு இலட்சக்கணக்கான உறவுகளை பறிகொடுத்து நிற்கும் இனத்தில் இவ்வாறான வலிந்த உயிரிழப்புகள் ஏற்றுக்கொள்ள முடியாதென்பதுடன் மீளாத்துயரத்தினையும் ஏற்படுத்தி விடுகிறது.

இன்றைய பிராந்திய நலன்சார் உலக இயக்கத்தில் அனைத்துலக இயக்கத்தில் அனைத்துலக சாட்சியாக ஈழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் இன அழிப்பை கருத்திலெடுக்கப்படாதவிடத்து வலிந்து நாமே ஏற்படுத்திக்கொள்ளும் இவ்வாறான உயிரிழப்புகள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தி விடப்போவதில்லை.

மாறாக ஆறுதலும் தேறுதலும் அவசியப்படும் நிலையில் நின்று கொண்டிருக்கும் நாமே எமது துயரத்தை அதிகரித்துக்கொள்வதாகவே அமைந்து விடுகின்றது.

2009இல் நடைபெற இருந்த இன அழிப்பை எப்பாடுபட்டேனும் தடுத்து நிறுத்தி எமது உறவுகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தமது உயிரைக் கொடையாக்கிய ‘வீரத்தமிழ் மகன்’ முத்துக்குமார் முதலானவர்கள் முதல் ஏழு தமிழர் விடுதலைக்காக உயிராயுதமாக மாறிய செங்கொடியின் உயிர்த்தியாகம் வரை, தொப்புள்கொடி உறவின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்தியிருந்தாலும் அனைத்து தியாகங்களும் விழலுக்கு இறைத்த நீராகியதென்பது கசப்பான உண்மையாகும்.

பிராந்திய வல்லாதிக்க நாடுகளின் சுயநலன்சார் உலக இயக்கத்திற்குள் எமது உயிர்த்தியாகங்கள் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றது. ஆகவே, தொடரும் தீக்குளிப்பு மரணங்களுக்கு முற்றுப்புள்ளியாக பா.விக்னேஷின் உயிர்த்தியாகம் அமையட்டும் என அனைவரையும் உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை வென்றெடுக்க சாதி, மத, அரசியல், கட்சி வேறுபாடுகள் களைந்து அனைவரும் ஓரணியில் ஒன்றுபட்ட சக்தியாக போராடுவதே தொடரும் தீக்குளிப்பு மரணங்களுக்கு முடிவுரையாக அமையும்.

பா.விக்னேஷ் அவர்களின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம் என தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: