5000 ஏக்கரில் தமிழகத்தில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம்: ஜெ., தொடங்கிவைத்தார்

jaya-opens-solar-plantராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கமுதியில் ரூ.4,536 கோடியில் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையத்தை தலைமைச்செயலகத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். அதானி குழும நிறுவனத்தின் மின்சக்தி நிலையம் 648 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டது.

தமிழகத்தில், உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையத்தை அதானி குழுமம் உருவாக்கி உள்ளது. தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி பகுதியில் 648 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையம் துவக்கப்பட்டுள்ளது. சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் ரூ.4550 கோடி முதலீட்டில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையம் அமைப்பதற்கு தேவையான பொருட்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு கடந்த 8 மாதங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் உற்பத்தி நிலையத்தில் ஒரே சமயத்தில் 8500 பேர் பணியாற்றுகின்றனர். இந்த சூரிய ஒளி மின்சக்தி நிலையத்தில் இருந்து மாநிலங்களுக்கு மின்சாரம் விற்பனை செய்யப்படும்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : முதல்வர் ஜெயலலிதா 21ம்தேதி அன்று தலைமைச் செயலகத்தில், ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் அதானி கிரீன் எனர்ஜி (தமிழ்நாடு) லிமிடெட் நிறுவனத்தால் 4536 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தார்.

அதானி குழும நிறுவனங்களால் ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் 648 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையமானது 216 மெகாவாட் திறனுள்ள 2 அலகுகள், 72 மெகாவாட் திறனுள்ள 3 அலகுகள், என மொத்தம் 648 மெகாவாட் திறன் கொண்ட 5 அலகுகளாக நிறுவப்பட்டுள்ளது.

இந்த 648 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையமானது தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தால் நிறுவப்பட்டுள்ள கமுதி 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி, தலைமைச் செயலாளர் இராம மோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், மேலாண்மை இயக்குநர் சாய் குமார், அதானி குழும நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ், அதானி, இயக்குநர்கள் கரண், அதானி, சாகர், அதானி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

tamil.oneindia.com

TAGS: