டெல்லி: தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு சிந்து நதியை வழங்காமல், அதை இந்தியாவிற்குள் திசை திருப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1960ம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி ஒப்பந்தப்படி, இங்கு உற்பத்தியாகும், சிந்து நதியின் தண்ணீரில் 20 சதவீதத்தை மட்டுமே இந்தியா பயன்படுத்த முடியும். 80 விழுக்காடு நீரை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது. வறண்ட பூமியான பாகிஸ்தானில் பெரும்பாலான விவசாயம் சிந்து மற்றும் அதன் துணை நதிகளின் தண்ணீரை நம்பியே உள்ளது. இதை இந்தியா தர மறுத்தால் பெரும் பொருளாதார சிக்கலுக்கும், உணவு பொருள் விலையேற்றத்திற்கும் உள்ளாகும் பாகிஸ்தான்.
தீவிரவாத தூண்டுதல்
காஷ்மீரில் கலவரம் தூண்டியது. யூரி பகுதியில் ராணுவ வீரர்களை கொன்றது உள்ளிட்ட செயல்களில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ள நிலையில், சிந்து நதியை பாகிஸ்தானுக்கு அனுப்பாமல் இந்தியாவிற்குள்ளேயே திசை திருப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உறவு தேவை
மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப்பிடம் நிருபர்கள் இதுபற்றி கேட்டபோது, எந்த ஒரு ஒப்பந்தம் செயல்பட வேண்டுமானாலும், இரு தரப்பும் பரஸ்பரம் நல்ல உறவோடு இருக்க வேண்டியது அவசியம்.
ஒரு கை ஓசை
ஒருபக்கத்து ஒத்துழைப்பாக மட்டுமே இருக்க கூடாது என்றார். இதன்மூலம், தண்ணீரை போகவிடாமல் தடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க பார்க்கிறது இந்தியா. ராணுவ ரீதியில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா முயன்றால் அந்த நாடும், சீனாவும் அணு ஆயுதங்களை கொண்டு பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் அரசுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளன. எனவே ராஜதந்திர ரீதியில் மட்டுமல்லாது, அந்த நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையிலும் காய் நகர்த்த திட்டமிடுகிறது இந்தியா.
கத்தியின்றி, ரத்தமின்றி
நதிநீர் பிரச்சினை மட்டுமின்றி, சர்வதேச நாடுகள் துணையுடனும், பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா காய் நகர்த்தி வருகிறது. ஐ.நா.சபையிலும் பாகிஸ்தானுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது. மொத்தத்தில், கத்தியின்றி, ரத்தமின்றி சாதிக்க முயல்கிறது இந்தியா.