காவிரி பிரச்சனையில் மவுனியாக வேடிக்கை பார்த்த மத்திய அரசு- தலையில் தட்டிய சுப்ரீம்கோர்ட்!

cauvery-water315சென்னை: காவிரி பிரச்சனையில் மத்திய அரசு இதுவரை தலையிடாமல் மவுனியாக வேடிக்கை பார்த்து வந்தது. தற்போது தமிழகம், கர்நாடகா மாநில முதல்வர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு 2007-ல் வெளிவந்த போதும் மத்திய அரசு 2013-ல்தான் அரசிதழில் வெளியிட்டது. ஆனாலும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று வாரியம் ஆகியவற்றை மத்திய அரசு அமைக்கவில்லை. மத்தியில் பாரதிய ஜனதா அரசு வந்தது முதலே காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று தமிழகம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்திய அரசு கிஞ்சித்தும் காது கொடுத்து கேட்கவே இல்லை.

 

கள்ள மவுனம் காவிரியில் தமிழகத்துக்கான நீரை கர்நாடகா திறந்துவிட மறுத்து வரும்போது கூட மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு கள்ள மவுனம் சாதித்தே வந்தது.

வன்முறை… காவிரியில் நீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களின் போது அமைதி காத்த மத்திய அரசு, தமிழகத்தில் எதிர்வினை கிளம்பியவுடன் லைட்டாக வாய் திறந்தது.

ஒப்புதல் கொடுத்த மத்திய அரசு ஆனால் பிரச்சனைக்கு தீர்வு காண, தமிழகத்துக்கான நீரை திறந்துவிட எந்த ஒரு நடவடிக்கையுமே மத்திய அரசு எடுக்கவில்லை. கடந்த 20-ந் தேதியன்று தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை நிறைவேற்ற முடியாது என சட்டசபையை கூட்டியது கர்நாடகா. நாட்டின் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஒரு மாநில அரசு சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றும்போது கூட மத்திய அரசு வாயே திறக்கவில்லை. மாறாக மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநரே கர்நாடகாவின் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்த வெட்கக் கேடு நிகழ்ந்தது.

மேலாண்மை வாரியம் மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்துக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடுகிறது… ஆனால் மத்திய அமைச்சர்களோ, கர்நாடகாவின் பிரதிநிதிகளாக நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியிடம் உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த கூடாது என கோரிக்கை மனு கொடுத்த கோமாளித்தனமும் அரங்கேறியது.

 

இனி என்ன செய்யும்? இப்படி காவிரி பிரச்சனையில் நழுவி ஓடிக் கொண்டிருந்த மத்திய அரசை இன்று உச்சநீதிமன்றம் இழுத்து உட்கார வைத்திருக்கிறது. இரு மாநில முதல்வர்களுடன் 2 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் என்று இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை வேறுவழியே இல்லாமல் உச்சநீதிமன்றத்தில் ஏற்றுள்ளது மத்திய அரசு. இனியாவது மத்திய அரசு மவுனம் கலைத்து நடவடிக்கை எடுக்குமா?

tamil.oneindia.com

TAGS: