பெங்களூரு: இன்று முதல் 3 நாட்களுக்கு தினசரி 6000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டும் கூட கர்நாடக அரசு இதுவரை தண்ணீர் திறந்து விடவில்லை. இன்று காலை அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், மாலையில் அமைச்சரவைக் கூட்டத்தையும் கூட்டி இன்றைய நாள் முழுவதையும் விவாதிக்க ஒதுக்கி விட்டது. உச்சநீதிமன்றமாவது, ஒன்றாவது என்ற எண்ணத்தில்தான் அது இருக்கிறதே தவிர, அதன் உத்தரவை மதிக்க வேண்டும் என்ற அடிப்படை மரியாதை கூட அதனிடம் இல்லை. இதுவே வேறு மாநிலமாக இருந்திருந்தால் உச்சநீதிமன்றம் குதறி எடுத்திருக்கும். குறிப்பாக ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எவ்வளவு கடுமை காட்ட முடியுமோ அதைக் காட்டுகிறது. ஆனால் கர்நாடக விவகாரத்தில் தொடர்ந்து உச்சநீதிமன்றம் மென்மையாக இருப்பதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.
உமாபாரதி தலைமையில் கூட்டம்
இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி முன்னிலையில் இரு மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா ஆலோசனை
தமிழக அரசுத் தரப்பி்ல் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவுக்கு மத்தியிலும் மருத்துவமனையில் இருந்தபடியே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தனக்குப் பதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அனுப்பவும் அவர் முடிவெடுத்துள்ளார்.
அக்கறை காட்டாத கர்நாடகா
இப்படி மத்தியஅரசும், தமிழக அரசும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கேற்ப நடவடிக்கையில் இறங்கிய நிலையில் மறுபக்கம் கர்நாடக அரசுத் தரப்பிலோ அதைப் பற்றி சற்றும் அக்கறை காட்டவில்லை, கவலைப்படவில்லை. உச்சநீதிமன்றமாவது ஒன்றாவது என்று அந்த உத்தரவைத் தூக்கி் போட்டு விட்டு வேறு வேலைகளில் இறங்கியுள்ளனர்.
இதுவரை தண்ணீர் திறக்கவில்லை
இதுவரை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி தண்ணீர் திறக்கவில்லை. கேஆர்எஸ் உள்ளிட்ட எந்த அணையிலிருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. அப்படி திறக்கப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. மாறாக, கேபினட் மீட்டிங், அனைத்துக் கட்சிக் கூட்டம் ஆகியவற்றில்தான் பிசியாக உள்ளனர்.
சட்டத்தை மதிக்காத கர்நாடகா
இப்படி உச்சநீதிமன்றத்தை சற்றும் மதிக்காமல் ஒரு மாநில அரசு தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாக செயல்படுவது அனைவரையும் அதிர வைப்பதாக உள்ளது. தமிழ்நாடு இப்படி ஏதாவது விஷயத்தில் நடந்திருந்தால் சுப்ரீம் கோர்ட் இப்படி அமைதி காத்திருக்குமா என்ற கேள்விகளையும் பலர் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
கடுமையாக தண்டிக்க வேண்டும்
சட்டத்தையும், உத்தரவுகளையும் மதிக்காத கர்நாடக அரசை மிகக் கடுமையான வகையில் தண்டித்தால் மட்டுமே எதிர்காலத்தில் ஒவ்வொரு மாநில அரசும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளுக்குப் பயப்படும் நிலை வரும். இல்லாவிட்டால் இது மிகத் தவறான, மோசமான, கூட்டாட்சி, ஜனநாயகத்திற்கு எதிரான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்று சட்டத்தை மதிப்பவர்கள் கருதுகிறார்கள்