வாஷிங்டன்: இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என்று பாகிஸ்தான் மிரட்டியதை அமெரிக்கா கண்டித்துள்ளது.
காஷ்மீரில் யூரி ராணுவ முகாமில் வீரர்கள் அதிகாலை நேரத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் புகுந்து தாக்குதல்கள் நடத்தினர். இதில் 19 வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
யூரி ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உதவிய, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த பைசல் உசேன் அவான் ( 20), யாசின் குர்ஷீத் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டு விட்டனர். அவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இது தொடர்பான ஆதாரங்களை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை நேரில் அழைத்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ். ஜெய்சங்கர் வழங்கினார்.
அழித்துவிடுவோம் இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: காஷ்மீர் பிரச்சினையில் இருந்து உலகத்தின் கவனத்தை திசை திருப்புவதற்காக, இந்தியாதான் யூரி ராணுவ முகாம் தாக்குதலை நடத்தி உள்ளது. காஷ்மீர் தாக்குதலுக்கு பழிவாங்கும் விதத்தில் எங்கள் மீது இந்தியா போரை திணித்தால், அந்த நாட்டை நாங்கள் அழிப்போம்.
அணுகுண்டு வீசுவோம் இந்தியாவின் எந்தவொரு தாக்குதலையும் சந்திப்பதற்கு பாகிஸ்தான் ராணுவம் முழுமையாக தயார் நிலையில் உள்ளது. ஷோகேஸ்சில் வைப்பதற்காக ஒன்றும் நாம் அணுகுண்டு தயாரித்து வைத்திருக்கவில்லை. அதைப் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டால், அதை பயன்படுத்துவோம். இந்தியாவை அழிப்போம்.
காஷ்மீர் பிரச்சினை பாகிஸ்தானின் வான் பிரதேசத்தில் இந்தியா அத்துமீறினால் பாகிஸ்தான் விமானப்படை சரியான பதிலடி தரும். காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு பாகிஸ்தானைப் போன்று இல்லாமல் இந்தியா ஆர்வம் காட்டவில்லை என்பதை தற்போது ஒட்டுமொத்த உலக நாடுகள் தெரிந்துகொண்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா சர்ஜிகல் அடி ஆனால், இவ்வாறு அவர் பேட்டி கொடுத்த சில தினங்களிலேயே இந்தியா, எல்லை தாண்டி சென்று தீவிரவாத முகாம்களை அழித்து திரும்பியது. இதனால் பாகிஸ்தான் அணு குண்டை பிரயோகித்து விடுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது. எனவே அமெரிக்கா முன்வந்து, பாகிஸ்தானை கண்டித்துள்ளது.
சீரியஸ் விஷயம் பெயர் தெரிவிக்க விரும்பாத அமெரிக்க சீனியர் டிபார்ட்மென்ட் அதிகாரி ஒருவர், செய்தி ஏஜென்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியதாவது: அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான அமெரிக்க நிலைப்பாட்டை, பாகிஸ்தானிடம் பல முறை கூறிவிட்டோம். இப்போது பாகிஸ்தான் அமைச்சர் பேசியுள்ள பேச்சு சீரியசாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது.
கண்காணிப்பில் பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் மிகவும் ஆபத்தானவை., எனவே அதன் பயன்பாடு, நகர்வுகளை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது. பாகிஸ்தான் மிரட்டல் விடுக்கும் முன்பிருந்தே அமெரிக்கா அதை செய்துகொண்டுதான் உள்ளது, இவ்வாறு அந்த அதிகாரி கூறியுள்ளார்.
பொறுப்போடு இருக்க வேண்டும் அதேபோல துணை ஸ்டேட் டிபார்ட்மென்ட் செய்தித்தொடர்பாளர் மார்க் டோனர் நிருபர்களிடம் கூறுகையில், அணு ஆயுதம் வைத்துள்ள நாடுகள் அதற்கேற்ற பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். ஏவுகணைகளும், அணு குண்டுகளும் ஆபத்தானவை. இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளுமே பதற்றத்தை குறைக்க வேண்டும்.
அமெரிக்கா கண்டனம் இரு நாட்டு ராணுவமும், தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். தொடர்பை கைவிட்டுவிடக்கூடாது. எல்லை தாண்டிய தீவிரவாதத்தை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. யூரி தாக்குதலையும் அமெரிக்கா கண்டித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தியாவுடன் பாக்கிஸ்தான் சுமுகமான உறவு கொள்வதே சிறப்பு.பல நாடுகள் போரினால் அழிந்து உள்ளதை நாம் அறிவோம் . நாடுகளுக்கிடையில் போர் மூண்டால் ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியும் மக்களும் பாதிப்பு அடைவார்கள் என்பதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம் . ஆகவே இந்த இரு நாடுகளும் ஒற்றுமையைக் கடைபிடிப்பதே சிறப்பு.