காவிரி: மத்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து தமிழகத்தில் வெடித்தது போராட்டம்- மோடி கொடும்பாவி எரிப்பு

modi fireசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகத்தின் முதுகில் குத்திய மத்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. காவிரி பிரச்சனை தொடர்பாக தொடக்கத்தில் இருந்தே மத்திய அரசு கர்நாடகத்திற்கு சார்பாகவே நடந்து கொண்டு வந்தது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கு மேல் மத்திய அரசால் இந்த பிரச்சனையில் ஒன்றும் விளையாட முடியாது என்று தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தடாலடியாக நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தமிழகத்திற்கு மத்திய அரசு செய்யும் துரோகம் என்று விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் மத்தியில் ஆளும் பாஜகவிற்கும் மோடிக்கும் எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காந்திபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் எதிரில் ஒன்று கூடி பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதே போன்று திருத்துறைப் பூண்டியிலும் மோடியின் உருவபொம்மையை விவசாயிகள் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளது.

காவிரி பிரச்சனையில் மத்திய அரசு கர்நாடகத்திற்கு ஆதரவாக நடந்து கொள்வதைக் கண்டித்து நாகை மாவட்டத்தில் விவசாயிகள் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: