காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு: மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்

seemanசென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தின் தார்மீக உரிமையை நிலைநாட்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரசும், தற்போது ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க.வும் இதனை நிறைவேற்றாது நீண்டகாலம் இழுத்தடித்து வந்தன.

இந்நிலையில், காவிரிச் சிக்கல் குறித்துக் கடந்த செப்டம்பர் 30 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தைச் அக்டோபர் 4ஆம் தேதிக்குள் அமைக்க உத்தரவிட்டது. மேலும், வாரியத்திற்குத் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகளை நியமிக்கவும் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி அரசுகளானது தங்கள் மாநிலப் பிரதிநிதிகளை நியமித்தது.

ஆனால், கர்நாடகா அரசானது தங்களது பிரதிநிதியை நியமிக்க மறுத்ததோடு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், தீர்ப்பன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக்கொண்ட மத்திய அரசானது தற்போது கால நீடிப்பு கேட்டு மனுதாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து அவமதித்துவரும் கர்நாடக அரசின் அடாவடித்தனத்தைக் கண்டிக்க வேண்டிய மத்திய அரசு, அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவது கர்நாடகத்தின் கைப்பாவையாக மத்திய அரசு மாறிவிட்டது என்பதைத்தான் காட்டுகிறது.

அரசியல் காரணங்களுக்காகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழ்த் தேசிய இனத்தின் தார்மீக உரிமையைப் பலி கொடுக்கத் துணை நிற்கும் பாஜக அரசின் இந்தச் செயலானது தமிழ்த்தேசிய இனத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும்.

மத்திய அரசானது, தமிழ்த் தேசிய இன மக்களின் உரிமைக்கும், உணர்வுக்கும் மதிப்பளித்து மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அளித்த மனுவை திரும்பப்பெற்று, மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முன்வர வேண்டும். இதனைச் செய்யாதபட்சத்தில், ‘இந்தியக் குடிமகன்’ என்ற உணர்வே தமிழர்களுக்குப் பட்டுப்போய், இந்தியாவானது அண்டை நாடோ எனத் தமிழர்கள் எண்ணுகிற நிலை உருவாகும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-http://www.maalaimalar.com

TAGS: