புது டெல்லி:
இந்திய ராணுவம் சமீபத்தில் பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகளின் முகாம்களை குண்டு வீசி அழித்தது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் புகுந்து தாக்க ஊடுருவும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே 2 ஆயிரத்து 289.66 கிலோ மீட்டர் தொலைவுக்கு சர்வதேச எல்லைப் பகுதி உள்ளது. இந்த எல்லையில் 2 ஆயிரத்து 34.96 கிலோ மீட்டர் தொலைவு எல்லை பகுதி ராணுவ வீரர்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும் பகுதி இரும்பு கம்பி வேலி போட்டு தடுக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 254.80 கிலோ மீட்டர் தொலைவு எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்கள் இல்லை. முட்கம்பி வேலியும் இல்லை. இந்த எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இதையடுத்து இந்த 254 கிலோ மீட்டர் தொலைவு எல்லைக்கு ராணுவ வீரர்களை நிறுத்தியும், முட்கம்பி வேலி அமைத்தும் எல்லையை முழுமையாக “சீல்” வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் ஆகிய நான்கு மாநில முதல்-மந்திரிகளுடன் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் கூறுகையில் “இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் வருகின்ற 2018-ம் ஆண்டு டிசம்பருக்குள் பாகிஸ்தான் நாட்டுடனான இந்தியாவின் ஒட்டுமொத்த எல்லையும் சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லைக் கண்காணிப்பில் மாற்றம் செய்யப்படும். நாட்டின் பாதுகாப்பில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், நாட்டின் பாதுகாப்பு படைகள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும், ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் எனவும் ராஜ்நாத் சிங் மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
-http://www.maalaimalar.com