மூலிகை பெட்ரோல் விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றிய வழக்கில் ராமர் பிள்ளைக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1999 ஆம் ஆண்டில் ராமர் பிள்ளை என்பவர் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாகக் கூறி தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதன்பேரில் அவர் தயாரித்த மூலிகை பெட்ரோலை பொதுமக்கள் பலரும் பணம் செலுத்தி வாங்கினர். ஆனால் இதில் கலப்படம் செய்திருப்பதாகப் புகார் எழுந்தது.
இதனையடுத்து சுமார் ரூ.2.27 கோடிக்கு மூலிகை பெட்ரோல் விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றியதாக ராமர் பிள்ளை மீது சென்னை எழும்பூரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன்பேரில் வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
அதில், ராமர்பிள்ளை உட்பட 5 பேருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவலுடன் கூடிய சிறை தண்டனையும், ரூ.30,000 அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. ராமர் பிள்ளை தாம் தயாரித்ததாக கூறும் மூலிகை பெட்ரோல் என்பது பெட்ரோலிய பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது என சி.பி.ஐ தரப்பு நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது.
குறிப்பிட்ட பெட்ரோலானது ஐ.எஸ்.ஐ. தரத்திலும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் சி.பி.ஐ விளக்கியுள்ளது. இது தற்போதைய சூழலில் வாகனங்களுக்கு கேடு எனவும் தெளிவு படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக நடந்துவந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
-http://news.lankasri.com
இப்போதைய முடிவு/தீர்ப்பு உண்மையிலேயே நியாயமானதா? காரணம் அங்கு எது வேண்டுமானாலும் நடக்கும்– உச்ச நீதிமன்ற முடிவையே மாற்றிய அரசியல்வாதிகள்– எப்படி நம்புவது? இந்த மூலிகை விவகாரம் எத்தனை ஆண்டுகளாக விசாரணையில் இருந்தது? அங்குள்ள அறிவியலாளர்களை நம்பலாமா? காழ்ப்புணர்ச்சி மக்கள் கொண்ட நாடு அது–