தடகள வீராங்கனை சாந்தியின் போராட்டத்திற்கு வெற்றி.. தமிழக விளையாட்டு ஆணைய பயிற்சியாளரானார்!

shanthiசென்னை: தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக நிரந்தரப் பணி ஆணையினை தடகள வீராங்கனை சாந்திக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சியை சேர்ந்தவர் சாந்தி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவருக்கு விளையாட்டில் இருந்த ஆர்வம் சர்வதேச அளவில் 11 பதக்கங்களையும், தேசிய அளவில் 50க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்று கொடுத்தது. தொடர்ந்து எடுத்து முயற்சியின் பலனாய், 2006-ம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

வாழ்த்துகள் ஒரு பக்கம் குவிந்த வந்த அதே நேரத்தில் இவரது பாலினம் குறித்து சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து அவரால் தடகளப் போட்டிகளில் பங்கேற்க முடியாத அளவிற்கு தடைகள் விதிக்கப்பட்டது. ஏற்கனவே வறுமை துரத்திய சாந்திக்கு மேலும் சிக்கல் அதிகமானது. இந்த தடையை அடுத்து, சாந்தி தனது குடும்பத்தின் வறுமையை போக்க செங்கல் சூளையில் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதனையடுத்து, அரசு சார்பில் தனக்கு ஒரு வேலை வேண்டும் என்று நீண்ட நாள் போராட்டத்தை சாந்தி நடத்திப் பார்த்தார். அவரின் போராட்டத்தின் ஒரு பகுதி வெற்றியாக தேசிய விளையாட்டு ஆணையத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சாந்திக்கு தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக நிரந்தர பணி கிடைத்துள்ளது. அதற்கான அரசாணையை சாந்தியிடம் தமிழக அரசு வழங்கியுள்ளது.

இனி, சாந்தி வறுமைக்கு ஒரு நிரந்த முடிவு கட்டிவிட்டு, தன்னை போன்றே வலுவான விளையாட்டுப் பெண்களை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

TAGS: